"கருப்பு" பலூன்! பிரதமர் வருகைக்கு எதிராக போராட்டம்.. காங். நிர்வாகி ரஞ்சன் குமாருக்கு வீட்டுக்காவல்
சென்னை: பிரதமர் மோடி இன்று தமிழகம் வரும் நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை அறிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி பிரிவு மாநிலத் தலைவர் ரஞ்சன் குமார் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்றும் நாளையும் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு வருகிறார். முதலில் காலை 10.45 மணியளவில் கேரள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து தமிழகம் வருகிறார்.

திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கோவை சூலூர் விமானப் படை ஏர்போர்ட்டிற்கு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் செல்கிறார்.
அண்ணாமலை யாத்திரை: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுக்க என் மண் என் மக்கள் என்ற பெயரில் யாத்திரை நடத்தினார். இந்த யாத்திரை இறுதி நிகழ்வு பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளத் தான் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் தமிழகம் வருகிறார். மாதப்பூரில் பொதுக்கூட்டத்தை நடத்தத் தமிழ்நாடு பாஜக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே பிரதமர் மோடியின் பயணத்திற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை அறிவித்துள்ளன. இன்று மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தக் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் விடும் போராட்டத்தைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி பிரிவு மாநிலத் தலைவர் ரஞ்சன் குமார் அறிவித்து இருந்தார். இதில் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
வீட்டுக்காவல்: இதற்காக அவர் மதுரைக்கும் செல்லவிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் நள்ளிரவில் ரஞ்சன் குமார் வீட்டிற்குச் சென்ற போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேறு சிலர் போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில், அவர்களைக் கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர். குறிப்பாகத் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதுகாப்புப் பணிகளில் பல ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி பிரிவு மாநிலத் தலைவர் ரஞ்சன் குமார் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதற்குக் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்கத் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி ராமேஸ்வரம் கடலில் இறங்கி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications