லீலாவதியை கொன்ற குடும்பத்திடம் போய் ஆதரவு கேட்பதா.. வெங்கடேசன் மீது குவியும் அதிருப்திகள்
லீலாவதியை கொன்ற குடும்பத்தாரை நேரில் சந்தித்து சு.வெங்கடேசன்ஆதரவு திரட்டினார்.
Recommended Video

சென்னை: அது எப்படி? லீலாவதியை கொடூரமாக கொலை செய்த குடும்பத்தாரை சு.வெங்கடேசன் நேரில் சந்தித்து பேசலாம்? வாக்கு தரும்படி ஆதரவு கேட்கலாம்? என்று மதுரை சிபிஎம் கட்சி வேட்பாளருக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
முதலில் லீலாவதியை பற்றி அறியாதவர்களுக்கு ஒரு சின்ன பிளாஷ்பேக்:
மதுரை வில்லாபுரம் பகுதியின் மாமன்ற உறுப்பினர். எளிமையானவர். மென்மையான குரல்தான்.. ஆனால் துணிச்சல் மிக்க கருத்துக்களை அழுத்தமாக பதிவு செய்வார்.
அவர் சார்ந்த சவுராஷ்டிர சமூகத்திற்கே உரிய அமைதியுடன் அதே சமயம் பகுதி மக்களின் சின்னச் சின்னப் பிரச்னைகளிலும் மிகுந்த அக்கறை எடுத்து, அதற்கான போராட்டங்களை முன்னெடுத்தவர். அதில் முக்கியமானது குடிநீர் பிரச்சனை. மக்களும் அவரை முழுசாக பின் சென்றனர். தண்ணீர் கொள்ளையை அம்பலப்படுத்தி கொண்டே வந்த லீலாவதிக்கு சமூகவிரோதிகள் பெருகினர்.

கருப்பு புள்ளி
1997 ஏப்ரல் 23-ம் தேதி, காலை கடைக்கு வந்து கொண்டிருந்தார் லீலாவதி. அப்போது பதுங்கியிருந்த ரவுடிகள் அரிவாளால் லீலாவதியைக் கொடூரமாக வெட்டினர். விரல்கள் தனித்தனியாக துண்டித்து மண்ணில் விழுந்து.. இறுதியில் லீலாவதியும் சரிந்து விழுந்தார். அன்று ரத்த வெள்ளத்தில் மிதந்த லீலாவதியை மக்கள் வெள்ளம் கொண்டு சென்று அடக்கம் செய்தது. இந்த லீலாவதி கொலைதான் திமுகவுக்கு கருப்பு புள்ளியானது.

எஸ்ஸார் கோபி
முக்கிய குற்றவாளியான நல்லமருது என்பவர் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த நல்ல மருதுவின் சகோதரர்தான் எஸ்ஸார் கோபி என்பவர். இவர் அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். இப்போது திமுகவில் நிர்வாகியாக உள்ளார்.

எதிர்ப்புகள்
இவரைதான் தற்போதைய மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார். இது கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சு.வெங்கடேசனின் இந்த செயலுக்கு எதிர்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன.

நிர்ப்பந்தமா?
லீலாவதியை கொலை செய்தவரின் குடும்பத்தினரை எதற்காக வெங்கடேசன் சந்திக்க வேண்டும்? என தெரியவில்லை. ஒருவேளை அண்ணன்தானே கொலையாளி, தம்பி என்ன செய்தார்? என்று வெங்கடேசன் யோசித்திருப்பாரா? அல்லது கூட்டணியில் இருப்பதால் ஆதரவு கோர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டதா என்றும் விளங்கவில்லை.

கதறி அழுது ஓடியவர்
ஆனால் ஒன்று... அன்று லீலாவதி ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்தபோது கதறியபடியே முதலில் ஓடிச்சென்ற நபர்களில் சு.வெங்கடேசனும் ஒருவர்! வெள்ளை துணியில் போர்த்திய லீலாவதியை நீண்ட நேரத்துக்கு பார்க்ககூட முடியாமல் அழுது நின்றவர்களில் ஒருவர்தான் சு.வெங்கடேசன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications