ரஜினியின் 50 ஆண்டு சினிமா பயணம்.. விழா எடுக்கும் 2 மகள்கள்.. செப்டம்பரில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டு கால திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் சென்னையில் பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்த அவரது குடும்பத்தினர் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் அனைத்து மொழிகளில் இருந்தும் நடிகர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க முடிவு எடுத்திருப்பதாகவும், செப்டம்பர் கடைசியில் விழாவை நடத்த பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஷ்ருதி ஹாசன், சத்யராஜ், ஆமீர் கான், செளபின், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இருந்தும் நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இதனால் தமிழ், தெலுங்கு, இந்தியில் கூட கூலி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் முதல் நாளிலேயே ரூ.151 கோடி வசூல் செய்து கூலி திரைப்படம் சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக கூலி அமைந்துள்ளது. ரஜினிகாந்தின் 50 ஆண்டு திரைப் பயணத்தை கொண்டாடும் வகையில், இந்த படம் ரிலீஸாகி இருப்பது அவரின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
கலவையான விமர்சனங்களை பெற்றாலும், விடுமுறை நாட்கள் என்பதால், மக்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் ரஜினிகாந்த் அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஒன்றை கொடுக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது கமல்ஹாசனின் 50 ஆண்டு கால திரைப்பயணத்தை அத்தனை மொழிகளின் கலைஞர்களும் இணைந்து கொண்டாடினார்கள்.
அதன் வீடியோக்கள் இன்றளவும் யூட்யூபில் அதிகளவில் பார்க்கப்பட்டு வருகிறது. அதுபோல் ரஜினிகாந்திற்கும் 50 ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடும் விழா ஒன்றை சென்னையில் நடத்த அவரது குடும்பத்தினர் முடிவு எடுத்திருக்கின்றனர். கூலி ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு முன்பாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
இதனையறிந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், ஆடியோ விழாவில் கொண்டாடலாமா என்று கேட்டிருக்கிறது. ஆனால் 50 ஆண்டு கால சினிமா பயணத்தை முழுமையாக கொண்டாடும் வகையில் விழா நடத்த உள்ளதாக ரஜினி குடும்பத்தினர் கூறி இருக்கின்றனர். தற்போது இதற்காக ஏற்பாடுகளை ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா இருவரும் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்துடன் பணியாற்றிய இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் என்று அத்தனை தரப்பையும் அழைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவை செப்டம்பர் மாத கடைசியில் நடத்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை சன் டிவியில் ஒளிபரப்பவும் ரஜினிகாந்த் தரப்பு பேசி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவரின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications