கரூர் முதல் ஈரோடு வரை.. உலகத்திற்கே ரோல் மாடலாகும் தமிழகம்.. கொரோனாவை குணப்படுத்துவதில் பெஸ்ட்!
கொரோனாவை குணப்படுத்துவதில் உலகத்திலேயே தமிழகம் மிக முக்கியமான மாநிலமாக மாறியுள்ளது.
சென்னை: கொரோனாவை குணப்படுத்துவதில் உலகத்திலேயே தமிழகம் மிக முக்கியமான மாநிலமாக மாறியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மேலும் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 20.
தமிழகத்தில் இன்று மட்டும் 90 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஒரே நாளில் 90 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 752ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 6954 பேருக்கு டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. 65977 பேருக்கு மொத்தமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தமிழகம்தான் முதலிடம்
இந்தியாவில் கொரோனா நோயாளிகளை அதிகம் குணப்படுத்தியதில் தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 44% பேர் குணப்படுத்தப்பட்டு உள்ளனர். தமிழகம் இதில் இரண்டாம் இடம் வகிக்கிறது. கேரளாவில் கொரோனா ஏற்பட்டவர்களில் 74% குணப்படுத்தப்பட்டள்ளனர். ஆனால் மக்கள் தொகை, மருத்துவமனை எண்ணிக்கை, குணப்படுத்தப்படும் வேகம் ஆகியவற்றை கணக்கில் கொண்டால் தமிழகம்தான் இதில் முன்னோடி.

கேரளாவில் கொரோனா வந்துவிட்டது
தமிழகத்தில் கொரோனா வருவதற்கு 3 வாரத்திற்கு முன்பே கேரளாவில் கொரோனா வந்துவிட்டது. அங்கு பலர் கடைசி கட்டத்தில்தான் குணப்படுத்தப்பட்டனர். 8 கோடி பேர் இருக்கும் தமிழகத்தில், கொரோனா நோயாளிகள் எல்லோரும் ஆரம்ப கட்டத்திலேயே குணப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தாக்கி அதிகபட்சம் 10 நாட்களுக்குள் தமிழகத்தில் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகம்தான் குணப்படுத்துகிறது
தினமும் மற்ற மாநிலங்களை விட அதிகமான கொரோனா நோயாளிகளை தமிழகம்தான் குணப்படுத்துகிறது. சராசரியாக தினமும் 60 பேர் தமிழகத்தில் குணப்படுத்தப்படுகிறார்கள். ஒருநாள் 100 பேர், மறுநாள் 30 பேர் என்ற விகிதத்தில் தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்படுகிறார்கள். கேரளா இதில் பின் தங்கி உள்ளது. கேரளாவில் தினமும் 20க்கும் குறைவான நபர்கள்தான் குணமாகிறார்கள்.

உலக நாடுகள்
பல உலக நாடுகள் தமிழகத்தை விட இதில் பின் தங்கி உள்ளது. தமிழகத்தில் இப்படி குணப்படுத்தப்படும் எல்லோரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபர்கள். முக்கியமாக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில்தான் அதிகமான நபர்கள் தினமும் குணப்படுத்தப்படுகிறார்கள். சராசரியாக கரூரில் தினமும் 25 பேர் குணப்படுத்தப்படுகிறார்கள்.

ஈரோட்டில் நிலை
அதேபோல் ஈரோட்டில் தினமும் 25 பேர் வீதம் குணப்படுத்தப்பட்டு ஒரே வாரத்தில் 64 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது ஈரோட்டில் 4 நோயாளிகள்தான் உள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் அங்கு மொத்தமாக எல்லோரும் குணப்படுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஈரோடு இந்தியாவிற்கே பெரிய ரோல் மாடலாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனா மற்றும் தென் கொரியா
சீனா மற்றும் தென் கொரியாவை போலவே தமிழகம் மிக சிறப்பாக கொரோனாவை குணப்படுத்தி வருகிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால், சீனா மற்றும் தென்கொரியாவை விட தமிழகம் மிக சிறப்பாக கொரோனாவை குணப்படுத்தி உள்ளது என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் தென் கொரியாவில் கொரோனாவை குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை முறை பயன்படுத்தப்பட்டது.

பிளாஸ்மா சிகிச்சை முறை
பிளாஸ்மா சிகிச்சை முறை மூலம், கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களின் ரத்தத்தின் பிளாஸ்மாவை எடுத்து அதை கொரோனா உள்ள நபர்களுக்கு கொடுத்து அதன் மூலம் கொரோனாவை குணப்படுத்துவார்கள். இதுதான் பிளாஸ்மா சிகிச்சைஆகும். இதன் மூலம்தான் தென் கொரியா கொரோனாவில் இருந்து எளிதாக மீண்டது. அதேபோல் சீனா கொரோனா குறித்து தொடக்கத்தில் இருந்து ஆராய்ந்து வந்தது.

சீனாவிற்குத்தான் அதிகம் தெரியும்
கொரோனா குறித்த மற்ற நாடுகளை விட சீனாவிற்குத்தான் அதிகம் தெரியும். அதனால் சீனாவும் மிக எளிதாக கொரோனா நோயாளிகளை குணப்படுத்திவிட்டது. இரண்டு நாடுகளிலும் 2 ஆயிரத்திற்கும் குறைவான நோயாளிகள்தான் தற்போது உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்திற்கு கொரோனா புதிய நோய். அதேபோல் தமிழகம் கொரோனாவிற்கு எதிராக பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ளவில்லை.

உலக சுகாதார மையம் எப்படி உள்ளது
உலக சுகாதார மையம் பரிந்துரை செய்த சாதாரண சிகிச்சை முறைகளை வைத்தே தமிழகம் இத்தனை பேர் குணமாக்கி உள்ளது. மிக அடிப்படையான சிகிச்சை மூலம் தமிழகம் இந்த சாதனையை செய்துள்ளது உலகம் முழுக்க பல நாடுகளுக்கு தமிழகம் இதன் மூலம் ரோல் மாடலாக மாறியுள்ளது. இதே வேகத்தில் சென்றால் இன்னும் 20 நாட்களில் மொத்தமாக தமிழகம் இந்த கொரோனா பாதிப்பில் இருந்து வெளியேற வர வாய்ப்புள்ளது. புதிய எபிசெண்டர் உருவாகாத நிலையில், தமிழகம் இதில் இருந்து முழுமையாக வெளிவர வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications