வெளிநாட்டு தொடர்பு இல்லை.. நிருபர்கள், போலீசாருக்கும் பரவிய கொரோனா.. முன்னெச்சரிக்கை அவசியம் மக்களே
சென்னை: தமிழகத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பு, வெளிநாட்டு தொடர்பு இல்லாத, பத்திரிக்கையாளர்கள், போலீசாருக்கும் பரவியுள்ளது. மக்கள் மிகவும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் தேவையை இது உணர்த்துகிறது.
Recommended Video
வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு மட்டும் பாதிப்பு இருந்த நிலை மாறி, அவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள், அவர்களின் உறவுக்காரர்கள் ஆகியோருக்கும், கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டால், அது 2வது ஸ்டேஜ் என்று அழைக்கப்படுகிறது.
தமிழகம் இப்படியான நிலையில்தான் இருப்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நேரடி தொடர்பு
இதுவரை, சுகாதாரத்துறை அமைச்சகம் தமிழக பாதிப்பு பற்றி செய்தியாளர் சந்திப்பு நடத்தும்போதெல்லாம், நோயாளிகளுக்கு வேறு தொடர்புகள் மூலம் இப்படி பரவியது என்பதை அழுத்தமாக சொல்ல இதுதான் காரணம். ஆனால், சமீப காலமாக, தமிழகத்தில் கொரோனா, நேரடி தொடர்பில்லாதவர்களுக்கும் பரவியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிக்கையாளர்கள்
திருவல்லிக்கேணியை சேர்ந்த ஒரு இளைஞர், சென்னையை சேர்ந்த ஒரு போலீஸ்காரர் (சப்-இன்ஸ்பெக்டர்) போன்றோருக்கு நெருங்கிய தொடர்பு இல்லாமலே, பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. அதேபோல சென்னையில், பத்திரிக்கையாளர்கள் சிலருக்கு அறிகுறி இல்லாமலே கொரோனோ தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. பத்திரிக்கையாளர்கள் தினமும் நிறைய பகுதிகளுக்கு செய்தி சேகரிக்க சென்றபோது, இதுபோல தொற்று பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முதல்வர்
சென்னை தவிர பிற ஊர்களிலும், கொரோனா இப்படியாக பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில், கொரோனா மூன்றாம் நிலைக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது என்று எச்சரிக்கைவிடுத்திருந்தார். தற்போது வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் உடன் தொடர்பு இல்லாதவர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் காரணமாக, மக்கள் அதிகம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்த்துகிறது.

செய்தியாளர் சந்திப்பு
அதேநேரம், இன்னும் கொரோனா தமிழகத்தில் இரண்டாம் நிலையிலேயே இருப்பதாக தமிழக அரசு கூறி வருகிறது. இந்த நிலைப்பாட்டில் அரசு இன்னும் இருக்கிறதா என்பதை, உறுதிப்படுத்த வேண்டியது, சுகாதாரத்துறை கடமையாகும். இன்றைய செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றிய தகவல் தெரிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும், கொரோனா 3வது ஸ்டேஜ் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications