“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி!
சென்னை: "திமுக கூட்டணியில் தொடர்கிறோம். தவெக அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு. உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் வரும்போது அது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம்." என்று செய்தியாளர் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களம் அடுத்தடுத்த திருப்பங்களைச் சந்தித்து வரும் வேளையில், "நாங்கள் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் இருக்கிறோம்" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தவெக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்ரவர்த்தி போட்டியிடுகிறார். இந்த அறிவிப்பையடுத்து பிரவீன் சக்ரவர்த்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், 'தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) கூட்டணி'யின் முதல் எம்.பி. வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன் என்று குறிப்பிட்டார்.
கூட்டணியில் இடதுசாரி கட்சிகளையும் சேர்த்துக் குறிப்பிட்டதற்கு, 'பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்ட தவெக கூட்டணியில் தங்கள் கட்சி இடம்பெறவில்லை' என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் மறுப்பு தெரிவித்திருந்தன.
இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியனையும் சந்தித்துப் பேசினார். மாநிலங்களவைத் தேர்தலில் ஆதரவு கோரி இருவரிடமும் அவர் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியனை சந்தித்துப் பேசியுள்ளார். 'இது மரியாதை நிமித்தமான சந்திப்பு' என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
இதையடுர்த்து இன்று செய்தியாளர்களுடன் பேசிய மு. வீரபாண்டியன், "தற்போது தேசிய அளவில் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறோம். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்துகொண்டேதான் அரசு அமைய தவெகவுக்கு ஆதரவு அளித்திருக்கிறோம்.
தவெக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதற்கான கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். சட்டம்-ஒழுங்கு, பெண்கள் மற்றும் சிறுமிகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதலுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
மதச்சார்பற்ற கொள்கைகளையும், மாநில உரிமைகளையும் பாதுகாப்பதே எங்கள் முதன்மை நோக்கம். அந்த வகையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அங்கமாகவே உறுதியுடன் தொடர்கிறோம். உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் வரும்போது அது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம் என மு.வீரபாண்டியன் தெளிவுபடுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications