திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது?
சென்னை: திமுக கூட்டணியை விட்டு வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி விலகலாம் என்று கூறப்படுகிறது. இதன் அடுத்தக்கட்டமாக கூட்டணியில் திமுகவுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே தொகுதி பங்கீட்டில் புயல் வீசி வருகிறது. நேற்றைய தினம் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செல்லவில்லை என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இதனால் திமுக கூட்டணியில் இன்னொரு விக்கெட் விழுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் நேற்றைய தினம் என்ன நடந்தது? என்பது தொடர்பான பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
திமுக கூட்டணியில் நாளைக்கும் தொகுதி பங்கீட்டை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிடிவாதம் பிடித்து வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தலா 6 தொகுதிகளை பெற்றன.

இதில் இருகட்சிகளும் தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றன. மாறாக தலா 4 தொகுதிகளில் தோல்வியை தழுவின. இந்த முறை இருகட்சிகளும் தொடர்ந்து திமுக கூட்டணியில் உள்ளது. ஆனால் திமுக கூட்டணியில் தேமுதிக, மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பிரச்சனை
இதனால் திமுக தனது கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகளுக்கு தலா ஒரு சீட்டுகளை குறைக்க கூறி வருகிறது. இதற்கு பல கட்சிகள் ஒப்புக்கொண்டு தங்களின் தொகுதி எண்ணிக்கையை கடந்த முறையை ஒப்பிடும்போது இந்த முறை குறைத்து கொண்டன. ஆனால் காங்கிரஸ் கட்சி 3 சட்டசபை தொகுதிகள் கூடுதலாக பெற்றுள்ளது. அந்த பாணியில் இருகம்யூனிஸ்ட் கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை கோரின. ஆனால் திமுக அதனை ஏற்கவில்லை. மாறாக கடந்த முறையை விட ஒரு தொகுதிகளை குறைத்து 5 தொகுதிகள் தான் வழங்குவோம் என்று திமுக தொகுதி பங்கீட்டு குழு தெரிவித்தது.
இறங்கி போன இந்திய கம்யூனிஸ்ட்
இதனால் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தியடைந்தன. இருப்பினும் நேற்றைய தினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியை குறைத்து 5 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது. இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், முதல்வர் ஸ்டாலின் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் இறங்கி வரவில்லை. மேலும் கடந்த முறை 6 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை கூடுதல் சீட் கட்டாயம் வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிடிவாதம் பிடித்து வருகிறது.
இறங்காத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
அந்த வகையில் நேற்றைய தினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் முடிந்தவுடன் திமுக சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையை தொடர்பு கொண்டு 4வது கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ கூடுதல் தொகுதி தர வேண்டும் என்று கூறியுள்ளது. இதனால் பேச்சுவார்த்தை நடக்கவில்லை.
இதுபற்றி திமுகவை சேர்ந்த தலைவர் ஒருவர்,''இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை அணுகினோம். ஆனால் அவர்கள் அதிகப்படியான தொகுதிகளுக்கான கோரிக்கையில் உறுதியாக உள்ளனர். தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும்'' என்றார்.
6 தொகுதிக்கு மேல் வேண்டுமாம்
அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரங்களிடம் கேட்டபோது, ''திமுக 5 சீட் ஒதுக்குவது பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, எங்களுடன் பொதுவான அணுகுமுறையில் விவாதித்து வந்தது. ஆனால் திடீரென்று 5 தொகுதிக்கு ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் நாங்கள் 5 தொகுதிகளை ஏற்கவில்லை. நாங்கள் 6 தொகுதிகளுக்கு மேல் என்ற எங்கள் கோரிக்கையில் உறுதியாக இருக்கிறோம். எங்கள் கோரிக்கை குறித்து திமுக முடிவு செய்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்கட்டும்'' என்றார்.
தவெகவை தொடர்ந்து மார்க்சிஸ்ட்
இப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இறங்கி வராமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. ஏற்கனவே திமுகவில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி 2 சட்டசபை தொகுதிகளை கோரியது. ஆனால் திமுக ஒரு இடம் தான் வழங்கப்படும் என்று உறுதியாக கூறிவிட்டது. இதனல் வேல்முருகன் அதிருப்தியில் உள்ளார்.
திமுக கூட்டணியை பரிசீலனை செய்ய வேண்டும் என்று தனது கட்சியினர் சொல்வதாக கூறியுள்ளார். இதனால் அவர் இந்த முறை திமுக கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என்று கூறப்படும் நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியை தொடர்ந்து அடுத்த விக்கெட்டாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இருகட்சிகளின் ஒவ்வொரு செயல்பாடும் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications