'மக்கள் நலன்..' உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலையும் திமுக உடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சந்திக்கும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குழுக் கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டணி தொடரும்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அடுத்து நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலையும் திமுக உடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சந்திக்கும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும், மத்திய அரசின் திட்டங்களால் தமிழ மக்கள் நலன் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மக்கள் விரோத பாஜக
தொடர்ந்து பேசிய அவர், "மாநில உரிமைகள் பறிப்பது, புதிய கல்விக் கொள்கை, இந்தியா வரலாற்றை இந்துத்துவ வரலாறாக மாற்றுவது எனப் பல மக்கள் விரோத செயல்களில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதேபோல தமிழ்நாட்டிற்குத் தேவையான கொரோனா தடுப்பூசி தொடர்ந்து தர மறுத்து வருகிறது. செங்கல்பட்டு தடுப்பூசி அனுமதி அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசு வலியுறுத்தி பின்னரும் அனுமதி அளிக்கத் தொடர்ந்து மறுத்து வருகிறது" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்
தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டிலேயே உள்ளாட்சித் தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அதன் பிறகும் சுமார் மூன்று ஆண்டுகள் தேர்தல் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, 2019இல் ஊரகப் பகுதிகளில் மட்டும் நடத்தப்பட்டது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் 9 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பான வழக்கிலும்கூட வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கூட்டணி
முன்னதாக, நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றிருந்தது. ஆறு தொகுதிகளில் களமிறங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழ்வேளூர், மற்றும் கந்தர்வக்கோட்டை தொகுதிகளில் வெற்றி பெற்றது.












Click it and Unblock the Notifications