கோவை மக்கள் குற்றவாளிகளா.. ஆளுநர் ரவி பேச்சால் சிபிஎம் அப்செட்.. "பதவிக்கு அழகில்லை" என கண்டனம்
சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என பாஜகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் நிகழச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ஆளுநர் ரவி "பயங்கரவாதத்தை உருவாக்கக் கூடிய இடமாக கோவை உள்ளது" என்று கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த கருத்துக்கு சிபிஎம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு தனித்த நிகழ்வை காரணம் காட்டி, ஒட்டுமொத்த மக்களை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சதி
கடந்த 23ம் தேதி கோவையின் உக்கடம் பகுதியில் கார் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் காரை ஓட்டி வந்த முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள 6 தனிப்படைகளை அமைத்தது காவல்துறை. இதில் உயிரிழந்த நபர் NIA-வால் விசாரிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து 6 பேரை காவல்துறை கைது செய்தது. ஆனால் இது திட்டமிட்ட சதி என பாஜக கூறி வருகிறது.

அழகல்ல
இந்நிலையில் நேற்று(அக்.28) கோவையில் தனியார் கல்லூரியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியிருந்த ஆளுநர் ரவி, "பயங்கரவாதத்தை உருவாக்கக் கூடிய இடமாக கோவை உள்ளது" என்று கூறியிருந்தார். ஆளுநரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "ஒரு தனித்த நிகழ்வை காரணம் காட்டி, ஒட்டுமொத்த மக்களை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல" என்று கூறியுள்ளார்.

விமர்சனம்
மேலும், "தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என புகழ்பெற்ற தொழில் - தொழிலாளர் நகரமான கோவையை அவமதிக்கும் விதமானது இந்த கருத்து. கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து, துரிதமான முறையில் விசாரணை நடத்திய காவல்துறை - துப்பு துலக்கியுள்ளது. ஆனால், தொடக்கம் முதலே விசாரணையை சிதைக்கும் விதத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வந்தார். அவரின் பேச்சுக்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின.

மக்களை அவமதிக்க துணிந்துவிட்டார்
மக்களிடம் பதட்டத்தை கிளப்பி, பந்த் செய்து கலகம் நடத்தலாம் என்ற பாஜக/ சங் பரிவாரத்தின் குறுகிய அரசியல் முயற்சி - அறிவிப்பிலேயே பிசுபிசுத்து விட்டது. கடந்த காலத்திலேயே 'அண்டா பிரியாணி' கலவரமும், தற்கொலையை கொலையாக சித்தரித்து பந்த் கலகமும் செய்த சங்கி சித்து விளையாட்டுக்களை மக்கள் தெளிவாக உணர்ந்துவிட்டனர். எனவேதான், இப்போது வெட்கமற்ற முறையில் ஆளுநரை களமிறக்கியுள்ளது பாஜக. அவரும் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று பேசிக் கொண்டுள்ளார். மக்களை அவமதிக்க துணிந்துவிட்டார். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் இவ்வாறு பொருப்பற்று பேசுவது அவர் பதவிக்கு அழகல்ல என சுட்டிக்காட்டுகிறோம்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications