முதல்வர் சொல்லாத கருத்துக்கு விமர்சனம்.. சிபிஎம் பெ.சண்முகம் புதிய விளக்கம்
சென்னை: திருபுவனம் இளைஞர் காவல்துறை கஸ்டடியில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், "முதல்வரின் கருத்தை ஏற்கவில்லை." என கூறியிருந்தார். ஆனால் முதல்வர் சொல்லாத கருத்துக்கு அவர் அப்படி பதில் சொன்னதால் இது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அஜித்குமார் என்ற இளைஞர் காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அந்த கோயிலுக்கு சென்ற மதுரையைச் சேர்ந்த நிகிதா என்ற பெண்ணின் 9.5 சவரன் தங்க நகை மாயமாகியுள்ளது. இதுதொடர்பாக திருபுவனம் காவல்துறையினர் அஜித் குமாரிடம் விசாரணை நடத்தினார்கள்.

காவல்துறை கஸ்டடியிலேயே அஜித் கடந்த சனிக்கிழமை மாலை உயிரிழந்தார். அவர் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாக அஜித்தின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மறுபக்கம் இது அரசியல் களத்திலும் விவாதமாகியுள்ளது. அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் திமுக கூட்டணி கட்சியினரும் இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்து வருகிறார்கள். இதனிடையே, "காவல்துறை விசாரணையில் இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்." என முதல்வர் ஸ்டாலின் கூறியதாக தவறான தகவல் சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் முதல்வர் இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லியிருப்பதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்க சண்முகம், "முதல்வரின் கருத்தை ஏற்கவில்லை." என்று கூறியிருந்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் அப்படி ஒரு கருத்தே சொல்லவில்லை
இதனால் சண்முகத்தின் கருத்துக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூகவலைதளங்களில் திமுக - கம்யூனிஸ்ட்கள் இடையே ஆங்காங்கே விவாதமும் ஏற்பட்டது. அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என்று சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கவும், புலையன், குருமன்ஸ், குறவன் இனத்தின் உட்பிரிவுகளை பழங்குடியின பட்டியலில் இணைக்கவும் வலியுறுத்தி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், 'திருபுவனம் காவல் நிலையத்தில் விசாரணையின் போது இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக முதலமைச்சர் கூறியுள்ளார்.' என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு, முதலமைச்சர் கருத்து ஏற்புடையதல்ல.
உடற்கூறாய்வில் 15 இடங்களில் கொடுங்காயம் இருந்துள்ளதாக மாவட்ட நீதிபதி விசாரணையில் உறுதி செய்துள்ளார். உயிரிழந்தவரின் தம்பி நவீன்குமார் காவல்துறை தாக்கியதை நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்துள்ளார். எனவே உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினேன். முதலமைச்சர் அவ்வாறு கூறவில்லை என்பதை பிறகு உறுதிப்படுத்திக் கொண்டேன்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications