ரேப் அக்யூஸ்டு.. வெட்கங்கெட்டவர்.. 'பலாத்காரம்' குறித்த கிண்டல் பேச்சு- சீமானுக்கு கடும் கண்டனங்கள்!
சென்னை: நடிகை பலாத்காரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆபாசமாகவும் இழிவாகவும் பேட்டியளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீமானின் இந்த இழிவான பேட்டிகளுக்கு சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உ.வாசுகி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் உ.வாசுகி பதிவிட்டுள்ளதாவது: கலப்படமற்ற அசலான குரூரமான ஆணாதிக்க மூளை சீமானுக்கு..ஒரு கட்சியின் தலைவர், ரேப் அக்யூஸ்டு... இத்தனை விசாரணைக்குப் பின்னுமா ரேப் சட்டம் தெரியவில்லை? பாதிக்கப்பட்டவரை (survivor) வேறு நக்கல் செய்கிறார், நாதக உறுப்பினர்கள் இதற்காகவே கூண்டோடு விலக வேண்டும். இவ்வாறு உ.வாசுகி கூறியுள்ளார்.

கரூர் லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதிமணி கூறியிருப்பதாவது: சீமான் பொதுவெளியில், எல்லை கடந்து வெளிப்படையாக அறுவெறுக்கத்தக்க வகையில் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் பேசுகிறார்.
இவரெல்லாம் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு.பாதிக்கப்பட்ட பெண்ணை அவமதிப்பது மட்டுமல்லாமல் பெண் இனத்தையே சீமான் அவமதிக்கிறார்.
அவரைப் பொறுத்தவரை பெண்ணை தூக்கிப்போய் பாலியல் வன்கொடுமை செய்யாமல் வேறு எவ்விதமான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டாலும் அது பிரச்சினையில்லை. எவ்வளவு வக்கிரமான மனநிலை!
அந்தக் குற்றச்சாட்டைத் தான் விஜயலட்சுமி சீமான் மீது வைக்கிறார். ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டு அவரை ஏமாற்றுவதும் சட்டப்படி கடுமையான குற்றமே என்பதை சட்டம் சீமானுக்குப் புரிய வைக்கும்.
இப்படி ஆபாசமாக பாலியல் வக்கிரத்தோடு,பெண்களை அவமதிக்கும் வகையில்,பெண்களின் பாதுகாப்பிற்கும்,கண்ணியத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பேசுகிற ஒருவரை ஒரு சமூகமாக நாம் கடுமையாக எதிர்க்கவேண்டும். இப்படிப்பட்ட பாலியல் வக்கிரம் பிடித்தவர்களுக்கு,பெண்களை கேவலமாக நினைப்பவர்களுக்கு பொதுவாழ்வில் எவ்வித இடமும் இருக்கக்கூடாது. சீமானின் இந்தப் பேச்சிற்காக காவல்துறை அவர் மீது தனியாக வழக்குப் பதிவுசெய்ய வேண்டும்.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சகோதர, சகோதரிகள் இப்படிப்பட்ட கேவலமான பேச்சை,செயலை ஆதரிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

தமிழ் தேசியம் என்பது பெண்களை ஆபாசமாகவும்,பாலியல் வக்கிரத்தோடும் பேசுவதல்ல. பெண்களின் கண்ணியத்தை மதிக்கக்கூடியது. வீரத்தைப் போற்றக் கூடியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார்.
ஜோதிமணி, உ.வாசுகி கண்டனம் ஏன்?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், வயசுக்கு வந்து குச்சுல உட்கார்ந்துட்டு இருக்குற புள்ளைய, தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வச்சி குண்டுகட்டா பலாத்காரம் செஞ்சுவிட்ட மாதிரி எல்லாரும் கத்திகிட்டு இருக்கீங்க.. என பேசியிருந்தார். அத்துடன், நடிகை தம்முடன் பணத்துக்காகவே படுக்கையை பகிர்ந்து கொண்டார்; அவருக்கு மாதம் ரூ.50,000 வழங்கப்பட்டது என்றும் சீமான் கூறியிருந்தார். சீமானின் இந்த பேட்டிகளை பகிர்ந்து உ.வாசுகி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications