சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

“தற்போது சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது” .. மு.க.ஸ்டாலின் பேச்சு

Google Oneindia Tamil News

சென்னை: "தற்போது சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது" என திமுக தலைவர். மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். "அநீதி அ.தி.மு.க. ஆட்சி விரைவில் வீழும். தி.மு.க. ஆட்சியை நிலைநாட்ட கழக சட்டத்துறை சகோதரர்கள் தங்களது பங்களிப்பை தொய்வில்லாமல், தொடர்ந்து செய்ய வேண்டும்!"
என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இன்று (10-01-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.வில் நடைபெற்ற தி.மு.க. சட்டத்துறை இரண்டாவது மாநாடு, சட்ட மற்றும் அரசியல் கருத்தரங்கில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை அமைப்புகளில் ஒன்றான சட்டத்துறை சார்பில் நடைபெறும் சட்டக் கருத்தரங்கம் மற்றும் அரசியல் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சட்டக் கருத்தரங்கம் - அரசியல் கருத்தரங்கம் என்று எதற்காக பிரித்துப் போட்டீர்கள் எனத் தெரியவில்லை. நீங்கள் சட்டம் பற்றி பேசினாலே - அது அரசியலைத் தவிர்த்து விட்டு இருக்க முடியாது. எனவே, அதனைப் பிரித்துச் சொல்ல வேண்டியது இல்லை.

Currently there is a famine not only for social justice but also for legal justice says MK Stalin

'வக்கீலிடம் பேசும் போது ஜாக்கிரதையாக பேச வேண்டும்' என்பார்கள். ஒரு வக்கீல் அல்ல, ஆயிரக்கணக்கான வக்கீல்கள் இருக்கிறீர்கள். அதனால் மிக ஜாக்கிரதையாகப் பேச வேண்டும் என்பதை அறியாதவன் அல்ல நான்! நீங்கள் சட்ட நீதியைப் பேசுபவர்கள்! நான் சமூகநீதியைப் பேசுகிறேன்!

இந்தக் காலத்தில் சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் தான் இத்தகைய கருத்தரங்கை நம்முடைய வழக்கறிஞர் அணி ஏற்பாடு செய்துள்ளது. மக்கள் மன்றத்தில் மட்டும் பேசிக் கொண்டு இருக்க முடியாது, நீதிமன்றங்களையும் பயன்படுத்தியாக வேண்டும் என்ற நெருக்கடி எங்களுக்கு ஏற்பட்டுள்ளதைப் போல, நீதிமன்றங்களில் மட்டுமல்ல, மக்கள் மன்றங்களிலும் பேசியாக வேண்டும் என்ற நெருக்கடி உங்களைப் போன்ற வழக்கறிஞர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாகத்தான் இத்தகைய கருத்தரங்கங்கள் ஏராளமாக நடத்தியாக வேண்டும்.

எனது பேச்சை டேப் செய்யட்டும்... தெரிந்து தான் டெலிபோனில் பேசினேன்... ஸ்டாலின் பரபரப்பு பேச்சுஎனது பேச்சை டேப் செய்யட்டும்... தெரிந்து தான் டெலிபோனில் பேசினேன்... ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

இதனை ஏற்பாடு செய்துள்ள கழக சட்டத்துறைத் தலைவர் ஆர்.சண்முகசுந்தரம் அவர்களையும், சட்டத்துறைச் செயலாளர் கிரிராஜன் அவர்களையும், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், தலைமைக் கழக வழக்கறிஞர்களையும் - வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்!

பொதுவாக வாசல் இல்லாமல் வீடு கட்ட முடியாது என்பதைப் போல வக்கீல்கள் இல்லாமல் கட்சி நடத்த முடியாது. அந்தளவுக்கு வழக்கறிஞர்களின் பணி மகத்தானது; முக்கியமானது. வழக்கறிஞர்கள் இல்லாமல் அரசியல் இல்லை, அரசியல் கட்சிகள் இல்லை. அதுதான் உண்மை. எல்லா இயக்கங்களையும் வளர்த்தவர்கள் வழக்கறிஞர்கள் தான்!

Currently there is a famine not only for social justice but also for legal justice says MK Stalin

எனக்குக் கிடைத்த முதல் வெற்றி என்பது சட்டத்துறையால் கிடைத்து என்பதை எனது வாழ்நாளில்; உயிர் போகிற வரை நான் மறக்க மாட்டேன். 95 வயது வரை இந்தத் தமிழ்ச்சமுதாயத்தின் உயர்வுக்காக ஓயாமல் உழைத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு, அவரது வாழ்நாள் ஆசையான 'அண்ணாவுக்கு பக்கத்தில் இருக்க வேண்டும்' என்ற ஆசையாவது எங்கே நிராசையாகப் போய்விடுமோ என்று நினைத்தபோது சட்டத்தின் சம்மட்டியால் அ.தி.மு.க. அரசின் மண்டையில் கொட்டி அந்த உரிமையை மீட்டுக் கொடுத்தவர்கள் நீங்கள் என்பதை நான் மறக்க மாட்டேன்.

அன்றைய தினம் நான் என்ன மனநிலையில் இருந்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். நீங்கள் அனைவரும் தலைவரை இழந்து நின்றீர்கள். நான் தலைவரோடு சேர்த்து எனது தந்தையை இழந்து நின்றேன். ஒரு தலைவருக்கு தொண்டன் ஆற்ற வேண்டிய கடமையையும் ஆற்றியாக வேண்டும் - ஒரு தந்தைக்கு மகன் ஆற்ற வேண்டிய கடமையையும் ஆற்றியாக வேண்டும்!

இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய சவாலை அன்றைய தினம் நான் எதிர்கொண்டேன். தலைவரை இழந்த சோகத்தில் இருக்கும் போது, அவருக்கான உரிமையை நிலைநாட்டப் போராட வேண்டிய நெருக்கடியும் எனக்கு ஏற்பட்டது.

இடம் தர மறுத்தால், தடையை மீறி தலைவர் கலைஞரின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்வது என்ற முடிவோடு நான் இருந்தேன். அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை நினைத்தும் கவலைப்பட்டேன். தொண்டர்களுக்கும் ஏதும் ஆகிவிடக்கூடாது, அதேநேரத்தில் நமது எண்ணமும் நிறைவேற வேண்டும் என்று யோசனையில் இருந்தேன்.

அப்போது எனது பாதிப் பொறுப்பை எடுத்துக் கொண்டு சட்டத்துறை போராடியது. பாதி பொறுபல்ல; முழு பொறுப்பையும் ஏற்று போராடியது. வழக்கறிஞர் வில்சன் வந்து வழக்கு தாக்கல் செய்யலாம் என்று சொன்னபோது என் மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது. உடனடியாக அது நடக்குமா? என்று யோசித்தேன். 12 மணி நேரத்துக்குள் அந்த உத்தரவை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்கள் நம்முடைய வழக்கறிஞர்கள்.

உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குலுவாடி ரமேஷ் மற்றும் எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.

'எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது' என்ற அண்ணாவுக்கு அருகில். 'ஓயாமல் உழைத்தவர் இங்கே ஓய்வெடுக்கிறார்' என்று கலைஞரை உடன் வைக்கும் உரிமையை நிலைநாட்டிக் கொடுத்தவர்கள் நீங்கள். அதனால் தான் சட்டத்துறைக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்தேன்.

குறிப்பாக மூத்த வழக்கறிஞர்கள் வில்சன், சண்முகசுந்தரம், விடுதலை, என்.ஆர்.இளங்கோ, வீரகதிரவன் உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்!

இப்படி சட்டத்துறையின் சாதனைகள் என்று சொன்னால் பல மணிநேரம் சொல்லிக் கொண்டே போகலாம். நேரத்தின் அருமை கருதி சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன்.

சட்டத்துறையின் சாதனைக்கு மகுடமாகச் சொல்லத்தக்கது ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு. நமக்கு ஜெயலலிதா மீதோ, சசிகலா குடும்பத்தினர் மீதோ தனிப்பட்ட பகை எதுவும் இல்லை. 1991-96 ஆம் ஆண்டு என்பது தமிழகத்தின் இருண்ட காலம் என்று சொல்லத் தக்க அளவில் தமிழகம் சூறையாடப்பட்டது. இதனைத் தடுக்க வேண்டிய கடமை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இருந்தது. இதற்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை வாங்கித் தரவேண்டிய பொறுப்பு தி.மு.க.வுக்கு இருந்தது. 1996 தேர்தலில் கழகம் அடைந்த மாபெரும் வெற்றி என்பது மக்கள் இந்தப் பணியைச் செய்வதற்கான கட்டளை தான்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கானது 18 ஆண்டுகள் நடந்தது. சென்னை தனிநீதிமன்றங்கள் - சென்னை உயர்நீதிமன்றம் - டெல்லி உச்சநீதிமன்றம் - பெங்களூரு தனி நீதிமன்றம் - கர்நாடக உயர்நீதிமன்றம் என அனைத்து இடங்களிலும் கண்கொத்திப் பாம்பாக நமது சட்டத்துறை கண்காணித்த காரணத்தால் தான் 2014 ஆம் ஆண்டு இவர்கள் நால்வருக்கும் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை தரப்பட்டது.

இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார். ஜெயலலிதா குற்றவாளிதான் என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவரது வாகனத்தில் இருந்து தேசியக் கொடியை கழற்ற வைத்தது கழக வழக்கறிஞர் அணி.

இந்த ஜெயலலிதாவை புனிதரைப் போல இன்னமும் சிலர் திட்டமிடுகிறார்கள், சில ஊடகங்கள் அதனைப் பேசாமல் மறைக்கின்றன என்றால் - 18 ஆண்டுகால சட்டப்போராட்டம் என்பது சாதாரணமானது அல்ல.

அதேபோல் தான் 2ஜி வழக்கு. திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க நினைத்து சிலரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சதி வழக்கு அது. மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா அவர்கள் பதவி விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. சிறையிலே அடைக்கப்பட்டார். தங்கை கனிமொழி, இதில் சிக்க வைக்கப்பட்டார். கைது செய்யப்பட்டார். அப்போது தலைவர் கலைஞர் அவர்கள் தினமும் எத்தகைய துன்பத்துக்கு ஆளானார் என்பது அருகில் இருந்து பார்த்த எங்களுக்குத் தான் தெரியும்.

ஆனால் அவர்களால் வீசப்பட்ட அனைத்து அஸ்திரங்களையும் தூள்தூளாக்கியவர் தான் கருத்தரங்கைத் துவக்கி வைத்த ஆ.ராசா அவர்கள். அந்தக் காலக்கட்டத்தில் சட்டத்துறைத் தலைவரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரத்தின் உழைப்பு மகத்தானது.

''ஏழு ஆண்டுகளாக நான் நீதிமன்றத்தில் உட்கார்ந்து இருந்தேன். எந்த ஆதாரத்தையும் கொண்டு வந்து தரவில்லை'' என்று நீதிபதியே சொல்லும் அளவுக்கு தங்களது வாதங்களின் மூலமாக 2ஜியை நோ - ஜி ஆக்கியவர்கள் நமது சட்டத்துறையைச் சார்ந்தவர்கள்!" இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

English summary
dmk leader MK Stalin said that "Currently there is a famine not only for social justice but also for legal justice".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X