கடந்த காலங்களை விட தவெக ஆட்சியில் மோசமாக நடக்கவில்லை! லாக்-அப் மரணங்கள் குறித்து வைகோ பேச்சு
சென்னை: கடந்த காலங்களில் நடந்த லாக் அப் மரணங்களை விடவும், தவெக ஆட்சியில் ஒன்றும் மோசமாக நடந்துவிடவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கடந்த 5 வாரங்களில் 4 லாக் அப் மரணங்கள் நடந்திருக்கும் சூழலில், வைகோவின் இந்த பேச்சு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பேசுபொருளாகி இருக்கிறது.
திமுக ஆட்சியின் போது மரப்புரம் அஜித் குமார் லாக் அப் மரணம் நாடு முழுவதும் பேசுபொருளாகியது. இதனை கண்டித்து அப்போது விஜய் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். தற்போது தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், கடந்த 5 வாரங்களில் மட்டும் 4 லாக் அப் மரணங்கள் நடந்திருக்கின்றன. ஆனாலும் இதுவரை முதல்வர் விஜய் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.

நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன், சென்னையில் 28 வயதான ஓட்டுநர் வெங்கடேசன், புழல் சிறையில் 45 வயதான பாலாஜி, தூத்துக்குடியில் 24 வயதாகும் அருணாச்சலம் ஆகியோர் லாக் அப் மரணம் அடைந்திருக்கின்றனர். அதிலும் சபரிவர்மன் மரணத்தில் உடலில் மட்டும் 19 இடங்களில் காயமும், எலும்பு முறிவும் இருந்தது பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் தெரிய வந்தது.
இந்த லாக் அப் மரணம் தொடர்பாக முதல்வர் விஜய் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எதிர்க்கட்சிகளாக திமுக மற்றும் அதிமுக கேள்வி எழுப்பி இருக்கும் சூழலில், காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் அமைதி காக்கின்றன. தற்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒரு படி மேலே சென்று தவெகவுக்கு ஆதரவாக பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாக் அப் தொடர்பாக வைகோவிடம் கேள்வி எழுப்பிய போது, லாக் அப் மரணம் அனைத்து ஆட்சிகளிலும் நடந்திருக்கிறது.. இந்த ஆட்சியில் மட்டும் நடக்கவில்லை.. இதனை விட மோசமாக முன்பு நடந்திருக்கிறது.. அவ்வளவு மோசமாக இப்போது ஒன்றும் நடந்துவிடவில்லை என்று தெரிவித்துள்ளார். வைகோவின் இந்த பேச்சு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நீண்ட காலமாக தமிழ்நாட்டில் காவல்துறை சீர்திருத்தத்தை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றன. இதற்காக அரசியல் கட்சிகளும் போராட்டங்களையும் நடத்தி இருக்கின்றன. ஆனால் வைகோ காவல்துறை சீர் திருத்தத்தை கோராமல், மற்ற ஆட்சியுடன் லாக் அப் மரணத்தை ஒப்பிட்டிருப்பது அக்கட்சியினர் மத்தியிலும் விவாதமாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
