கள்ளக்குறிச்சி கலவரம்! வாங்க மக்களே கூடுவோம்! வதந்தி பரப்பிய ’அட்மின்’! சல்லடை போடும் சைபர் கிரைம்!
சென்னை : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக கலவரம் மூண்ட நிலையில், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவி மரணம் குறித்து வதந்தி பரப்பியதாக சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் சைபர் கிரைம் போலீசார், பல்வேறு வாட்ஸ் ஆப் குரூப்களின் அட்மின்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மாணவி படித்து வந்த பள்ளி முன்பு நேற்று முன்தினம் திடீரென 500-க்கும் மேற்பட்டோர் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அது வன்முறையாக மாறியது. பள்ளியில் இருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதோடு, பள்ளியில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி கலவரம்
போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற காவல் துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் காவல்துறை டிஐஜி உள்ளிட்டா 17 காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலரது மண்டை உடைக்கப்பட்டதோடு போலீசாரையே விரட்டி அடித்தனர். கலவரக்காரர்கள் இந்த நிலையில் பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் இது குறித்து உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

வாட்ஸ் அப் குழு
இதை அடுத்து பல்வேறு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு தீவிரப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மாணவி இறந்த நாளில் இருந்தே சமூக வலைதளங்களில் மாணவியின் பெயரோடு நீதி வேண்டும் என ஹேஷ்டேக் பரப்பப்பட்டது. அப்போது அதில் பதிவிட்ட பலரும் மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தான் கலவரம் நடந்ததுக்கு முதல் நாள் இரவு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், தேனி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவிக்கு நீதி கேட்டு போராட வேண்டும் என்ற தகவல் வாட்ஸ் அப் குழுக்களை பகிரப்பட்டுள்ளது.

திடீர் போராட்டம்
அதன் அடிப்படையிலேயே அடுத்த நாள் திரண்ட போராட்டக்காரர்கள் பள்ளி முன்பு பள்ளி நிர்வாகத்திற்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். ஒரு கட்டத்தில் ஆவேசத்தில் பள்ளிக்குள் சென்ற கலவரக்காரர்கள் பள்ளியில் பேருந்துகளை எரித்ததோடு பல்வேறு அறைகளுக்கு புகுந்து சான்றிதழ்களை கொளுத்தியும் அங்கிருந்த பொருட்களையும் எடுத்துச் சென்ற காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியானது.

அதிரடி கைது
அந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் இதுவரை 200க்கும் மேற்பட்டோரை கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போல மாணவியின் மரணம் குறித்து முகநூலில் வதந்தி பரப்பியதாக அதிமுகவை சேர்ந்த இரு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதே போல பல்வேறு மாவட்டங்களிலும் சிறுமியின் மரணம் குறித்து வருந்தி பரப்பியதாகவும் போராட வாருங்கள் என அழைப்பு விடுத்ததாக தகவல் பரப்பிய முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப் குழுக்களின் அட்மின்கள் குறித்து காவல்துறையினர் தகவல்களை திரட்டியுள்ளனர்.
Recommended Video

விசாரணை
திண்டுக்கல்லில் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இதே போல பல்வேறு மாவட்டங்களிலும் மாணவி மரணம் குறித்து வதந்தி பரப்பியதாக நபர்களை கண்காணித்து வருகின்றனர். இதேபோல கலவரத்திற்கு காரணமானவர்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு சிறப்பு குழுவை அமைத்துள்ளது. இதில் சைபர் க்ரைம் நிபுணர்கள் பல்வேறு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் உடனடியாக விசாரணை நடத்தி கலவரத்திற்கு காரணமானவர்கள் குறித்த விபரங்களை திரட்டி வருவதாகவும் விரைவில் பலரும் அதிரடியாக கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications