கரையைக் கடக்கும் மாண்டஸ்..தயார் நிலையில் இருக்க வேண்டும்..மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவு
சென்னை: புயலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவத் துறை தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், மருத்துவ கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
வடகிழக்கு பருவமழை காலத்தின் முதல் புயல் தனது வீரியத்தை காட்டத் தொடங்கியுள்ளது. மாண்டஸ் புயல் பலத்த காற்றுடன் கரையைக் கடந்து வருவதால் பல பகுதிகளில் கன மழை கொட்டி வருகிறது. புயல் கரைகடக்கும் பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கடற்கரை கிராமங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவத் துறை தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், மருத்துவ கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
மருத்துவமனைகளில் மின் துண்டிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், மின் துண்டிப்பு ஏற்பட்டால், மாற்றாக ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்கவேணடும், மருந்துகள், மருத்துவ உபகரணங்களை போதுமான அளவு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், மருத்துவமனைகளில் ஐசியூ, வெண்டிலேட்டர், படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், பாதிப்பு அதிகமாக இருக்கும் என கண்டறியப்பட்ட பகுதிகளில் ஆம்புலன்சுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் தற்போது தனது வேகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. புயல் முழுவதும் கரையைக் கடந்த பின்னரே பாதிப்புகள் எத்தகையது என்பது தெரியவரும்.
இன்றிரவு கரையை கடக்கும் மாண்டஸ் புயல்.. எங்கெல்லாம் மின்சாரம் நிறுத்தப்படும்? ராஜேஷ் லக்கானி தகவல்