கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் அதிடியாக உயர்வு.. தொடர்ந்து 4வது மாதமாக நடந்த மாற்றம்
சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தொடர்ந்து 4வது மாதமாக உயர்ந்துள்ளது. சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி மாற்றம் செய்யப்படுவது வழக்கம் என்பதால், இப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் வணிக சிலிண்டர் விலை, 61 ரூபாய் 50 பைசா உயர்ந்து 1964.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தை அடிப்படையாக வைத்து, இந்தியாவில் மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுவதை பொதுத்துறை நிறுவனங்கள் வழக்கமாக வைத்துள்ளன.

பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் கேஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகின்றன. இதில் வீட்டு சிலிண்டர் விலை கடந்த மாதம், 818.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இம்மாதம், அதன் விலை மாற்றம் செய்யப்படாமல், அதே விலையே நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதேநேரம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை, கடந்த மாதம் 1,903 ரூபாய்க்கு விற்கப்பட்ட வணிக கேஸ் சிலிண்டர் விலை, இம்மாதம், ரூ.61.50 உயர்ந்துள்ளது. இதன் மூலம், 19 கிலோ எடையுள்ள சமையல் கேஸ் சிலிண்டர் விலை சென்னையில் இன்று 1964.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 4 மாதங்களாக, வணிக சிலிண்டர் விலை உயர்ந்து வருவது வணிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக வணிக சிலிண்டர் விலை 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை செப்டம்பர் மாதம் ரூ.38 உயர்ந்து இருந்தது. இதன் காரணமாக செப்டம்பர் 1ம் தேதி முதல் மாதம் 1,855 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் அக்டோபர் 1ம் தேதி அன்று 19 கிலோ எடையுள்ள வர்த்தக எரிவாயு சிலிண்டரின் விலை 48.50 ரூபாய் உயர்ந்தது. இதன்படி அக்டோபர் 1 முதல் 1,903 ரூபாய்க்கு வணிக சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 1ம் தேதியான இன்று , 61 ரூபாய் 50 பைசா உயர்ந்து 1964.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications