வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு வருது குட் நியூஸ்.. மீண்டும் தள்ளிப்போகிறது கடைசி தேதி? கவனம்
சென்னை: வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மீண்டும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது செப்டம்பர் 15 ஆம் தேதி கடைசி நாளாக உள்ள நிலையில், மேலும் பல லட்சம் பேரின் வருமான வரி இன்னும் ஆய்வு செய்யப்படாமல் உள்ளதால் இந்த நீட்டிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பளம் பெறுவோர் மற்றும் வணிக உரிமையாளர்கள் உட்பட பலர் தற்போது வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில், வருமான வரித் துறை தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரி விலக்குகளை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

வருமான வரி தாக்கல்
மோசடியான வரி விலக்குகளைக் கண்டறிய நாடு முழுவதும் சரிபார்ப்பு நடவடிக்கையை வருமான வரித் துறை தொடங்கியுள்ளது. மருத்துவக் காப்பீடு, வீட்டு வாடகைப்படி (HRA), கல்வி, வீட்டுக் கடன் வட்டி, வாகனக் கடன்களுக்கான விலக்குகள், அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான நன்கொடைகள் ஆகியவை இந்த ஆய்வில் அடங்கும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தெரிவித்துள்ளது.
வருமான வரித் துறை AI மற்றும் தரவு பகுப்பாய்வுக் கருவிகளின் உதவியுடன் வரி சலுகைக் கோரிக்கைகளை கவனமாக ஆராய்ந்து வருகிறது. தவறாக தாக்கல் செய்யப்பட்ட வரி அறிக்கைகளை அடையாளம் காண நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
ITR returns: வருமான வரி தாக்கல்
இந்த AI அமைப்பு, டிடிஎஸ் தரவு, வங்கிப் பதிவுகள் மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்கிறது. வருமான வரி அறிக்கைகள் (ITR), வருடாந்திர தகவல் அறிக்கை (AIS) மற்றும் படிவம் 26AS ஆகியவற்றுக்கு இடையேயான முரண்பாடுகளை உடனடியாகக் கண்டறிந்து, தவறுகள் அல்லது மோசடி முயற்சிகளைச் சுட்டிக்காட்டுகிறது.
தவறான கோரிக்கைகள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படும். செலுத்த வேண்டிய வரிக்கு 24% வட்டி மற்றும் 200% வரை அபராதம் விதிக்கப்படலாம். வரி ஏய்ப்பு போன்ற கடுமையான குற்றங்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
AI அமைப்பு, வருமான வரி அறிக்கை மற்றும் படிவம் 26AS ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளைக் கண்டறியும். இந்த ஆய்வில் அதிக விலக்கு கோரும் பன்னாட்டு நிறுவன ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழில்முனைவோர் ஆகியோர் உள்ளனர். மோசடியான கோரிக்கைகளுக்கு எதிராக அபராதம் மற்றும் வழக்குத் தொடர வருமான வரித் துறை தயாராகி வருகிறது.
வருமான வரி தாக்கல் கடுமையான சோதனை
அரசு தரப்பு தகவல்படி, 150 இடங்களில் மேற்கொள்ளப்படும் இந்த சரிபார்ப்பு நடவடிக்கை, மோசடிகளுக்குப் பின்னால் உள்ளவர்களைக் கண்டறிந்து பொறுப்புக்கூறலை உறுதி செய்யும். சிஏ-க்கள் மூலம் பொய்யான வருமான வரி தாக்கல் செய்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.
டிஜிட்டல் பதிவுகள் உட்பட முக்கிய ஆதாரங்களைக் கேட்டு விசாரிக்கப்படும் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. சில வரி செலுத்துவோர், சிஏ-க்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பல மோசடி கும்பல்கள், போலி விலக்குகள் மற்றும் சலுகைகளைக் கோரி கணக்குகளைத் தாக்கல் செய்வது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வருமான வரி கணக்குகளில் ஆதாரமில்லாமல் தவறான தகவல்களை அளிப்பவர்களுக்கு இந்த நடவடிக்கை ஓர் எச்சரிக்கையாகும். வருமான வரித் துறை, தவறான தகவல்களைக் கண்டறிய பல தரவுத்தளங்களைப் பயன்படுத்துகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சோதனை நடத்தியதில், மோசடியான உரிமைகோரல்களுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
வருமான வரி தாக்கல் : ITR Refund
குறைபாடுகள் இருந்தால், வரி செலுத்துவோர் தங்கள் கணக்குகளைத் திருத்திக் கொள்ளுமாறு கேட்டதன் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் சுமார் 40,000 வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து ₹1,045 கோடி மதிப்பிலான தவறான உரிமைகோரல்களை திரும்பப் பெற்றுள்ளனர்.
எனினும், இன்னும் பலர் இணங்கவில்லை, மோசடி கும்பல்கள் பின்னணியில் பெரிய கூட்டம் இருக்கிறதா என்றும் விசாரிக்கப்படுகிறது. வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், வரி செலுத்துவோர் தங்கள் கணக்குகளைத் திருத்தம் செய்ய முன்வர வேண்டும். மேலும், வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications