ராமேஸ்வரம் - காசி போக அரசின் சூப்பர் திட்டம்.. டிசம்பர் 16க்குள் இதை மறக்காம பண்ணிடுங்க
சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில், ராமேஸ்வரம் - காசி ஆன்மிகப் பயணத்துக்காக 420 பேரை அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 16 ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, ஆன்மிகம் உள்ளிட்டவற்றுக்கு பல திட்டங்கள் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திமுக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

கோயில்களில் குடமுழக்கு நடத்துவது, திருமண மண்டபங்கள், அன்னதான கட்டடங்கள், ரோப் கார் வசதி உள்ளிட்ட பணிகள் பல்வேறு கோயில்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, பழனி முருகன் கோயிலில் நடத்தப்பட்ட முருகன் மாநாடு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதைத்தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இலவச ஆன்மிக சுற்றுலா செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்மிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், சுற்றுலாத் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை இணைந்து ஆடி மாதத்தையொட்டி, ஆடி அம்மன் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அதன்படி, மூத்த குடிமக்கள் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இத்திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்து புரட்டாசி மாதத்தையொட்டி, பெருமாள் கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆன்மிக பக்தர்களின் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பது ராமேஸ்வரம் - காசி பயணமாகத்தான் இருக்கும்.
இதையடுத்து, அரசு சார்பில் ராமேஸ்வரம் முதல் காசிக்கு இலவச ஆன்மிக பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022-23 ஆம் ஆண்டில் 200 பேரும், 2023-24 ஆம் ஆண்டில் 300 பேரும் ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, 2024-25 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: "ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் இருந்து காசி, அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோயிலுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்து சமய அறநிலையத் துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில் இருந்து தலா 21 நபர்கள் வீதம் 420 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இந்து சமய அறநிலையத்துறையின் www.hrce.tn.gov.in என்ற வலைத்தளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன் டிசம்பர் 16 ஆம் தேதிக்குள் மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் தொடங்கும் இந்த ஆன்மிகப் பயணம் காசி தரிசனம் முடிந்து மீண்டும் ராமேஸ்வரம் வந்து ராமநாத சுவாமியை தரிசனம் செய்த பின்னரே நிறைவுபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications