டெல்லி குண்டுவெடிப்பு: அப்பாவி மக்கள் மீதான கோழைத்தனமான தாக்குதல் - எஸ்டிபிஐ கண்டனம்
சென்னை: டெல்லி செங்கோட்டை மெட்ரோ அருகே நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பாவி மக்கள் மீதான கோழைத்தனமான தாக்குதல் என்று எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ நிலையத்தின் அருகே நேற்று மாலை 6.52 மணி அளவில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக உபா சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் டெல்லி காவல் துறை வழக்குகளைப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள், கட்சியினர் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பாவி மக்கள் மீதான கோழைத்தனமான தாக்குதல் என்று எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஷர்புதீன் அஹமது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: நாட்டின் தலைநகரான டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நடைபெற்ற கொடூரமான குண்டுவெடிப்பிற்கு எஸ்டிபிஐ கட்சி ஆழ்ந்த அதிர்ச்சியையும், வேதனையையும் வெளிப்படுத்துகிறது. இந்தத் தாக்குதலில் 10க்கும் அதிகமான உயிர்கள் பலியாகியுள்ளன. பலர் படுகாயமடைந்துள்ளனர்.
நமது தேசிய வரலாற்றின் இதயமான செங்கோட்டைப் பகுதியில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தக் கோழைத்தனமான தாக்குதல் சமூகத்தின் அனைத்துத் தரப்பினராலும் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெறப் பிரார்த்திக்கிறோம்.
விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த அநாகரிகச் செயலுக்குப் பின்னணியிலுள்ள நோக்கம் தெளிவாகவே தெரிகிறது. அச்சத்தை விதைப்பது, சமூக நல்லிணக்கத்தைக் குலைப்பது, அரசியல் பிளவுகளைச் சுரண்டுவது ஆகியவையே அதன் குறிக்கோள்கள். பீகார் தேர்தலுடன் ஒத்திசைவாகவும், சமீபத்தில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்தும் இச்சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்டிபிஐ கட்சி அனைவரையும் அமைதியுடனும் கட்டுப்பாட்டுடனும் நடக்கவும், பிளவுபடுத்தும் கருத்துகளையும் பதற்றத்தைத் தூண்டும் செயல்களையும் தவிர்த்து, சமூக முரண்பாடுகளை ஆழமாக்காத வண்ணம் ஒன்றிணைந்து நிற்க வேண்டுமென வலியுறுத்துகிறது. குற்றவாளிகளையும் அவர்களுக்கு துணை நின்றவர்களையும் கண்டறிந்து வெளிக்கொணர்வதற்கு உடனடியாக சுயாதீன நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
நீதி எவ்வித பாரபட்சமோ அரசியல் தலையீடோ இன்றி நிறைவேற்றப்பட வேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய பேரழிவுகளைத் தடுக்கவும், அமைப்பு ரீதியான குறைபாடுகளை நீக்கவும் உளவுத் துறையைப் பலப்படுத்தவும், பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
