ஜனாதிபதி திரவுபதி முர்மு பிப்.18-ல் மதுரை வருகை- பாதுகாப்பு படை அதிகாரிகள் மீனாட்சி கோவிலில் ஆய்வு!
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வருகையை ஒட்டி மதுரையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை: ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18-ந் தேதி மதுரை வருகிறார். ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு படை அதிகாரிகள் இன்று மீனாட்சி அம்மன் கோவிலில் ஆய்வு நடத்தினர். மேலும் சித்திரை வீதிகளில் 70 நடைபாதை கடைகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் பிப்ரவரி 17,18 தேதிகளில் டிரோன்கள் பறக்கவும் மதுரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கடந்த 2021-ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி வரும் 18-ந் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், திரவுபதி முர்மு முதல் முறையாக தமிழ்நாடு வருகை தருகிறார். வரும் 18-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழிபாடு செய்கிறார்.

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வருகையை ஒட்டி மதுரையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் மதுரையில் முகாமிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். மதுரை ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளுடன் பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். மேலும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பார்வையிட்டனர். தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலானது 5 அடுக்கு பாதுகாப்பு வலயத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிய நடைபாதைகளில் 70 கடைகள் அகற்றப்பட்டுள்ளன. மதுரையில் பிப்ரவரி 17,18 தேதிகளில் ஆளில்லா டிரோன்கள் வானில் பறக்கவிடவும் தடை செய்யப்பட்ட்டிருக்கிறது. மதுரை விமான நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை நடைபெற்றது. மதுரையில் மக்கள் அதிகம் கூடுகிற அனைத்து பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் ஆகிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. மதுரையின் அனைத்து பகுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மதுரை பயணத்தைத் தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, கோவை ஈஷா மையம் செல்கிறார். கோவை ஈஷா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார். கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஈஷா யோகா மையம் செல்கிறார் ஜனாதிபதி திரவுபதி. இதன் பின்னர் கோவையில் ஓய்வெடுக்கும் ஜனாதிபதி பிப்ரவரி 19-ந் தேதி காலை கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். கோவையிலும் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications