அதிகரிக்கும் டெங்கு.. ஆக்ஷனில் இறங்கிய பொது சுகாதாரத்துறை.. தினமும் காய்ச்சல் முகாம் நடத்த உத்தரவு
சென்னை: டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை தினந்தோறும் காய்ச்சல் முகாம்களை நடத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழையும் நெருங்கி வருகிறது. மழை காரணமாக டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டும் இன்றி கொசு உற்பத்தியை ஏற்படுத்தும் வகையில் தண்ணீரை அப்புறப்படுத்தாத நபர்களுக்கு அபராதமும் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தனியாக வார்டுகளும் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி , கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் தினமும் 20 முதல் 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் 600-ஐ தாண்டி பதிவாகி உள்ளது. டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்களை நடத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தினமும் ஆயிரம் இடங்களில் பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும் வரை நடத்த வேண்டும் எனவும் பொது சுகாதாரத்துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications