வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் "வலிமை"..டெல்டாவில் வெளுக்கப்போகும் கனமழை..பிப்.1ல் கவனம்
வங்கக் கடலில் வலிமையடைந்துள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலிமையடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த பின்னரும் தமிழ்நாட்டில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம், செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. அடையாறு, மந்தைவெளி, திருவான்மியூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதனிடையே இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பிப்ரவரி 1ம் தேதி இலங்கை கடற்கரையை அடைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக 1ம் தேதி தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடைந்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடைந்து 1ஆம் தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடைய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் 1ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

பிப்ரவரி 2ஆம் தேதி தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றனர். அதன்படி இன்று காலையில் சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது.
தென்மேற்கு வங்காள விரிகுடா இலங்கைக் கடற்கரை, மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதி மற்றும் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் மணிக்கு 40-45 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications