காங்கிரஸ் அலுவலகத்தில் பாத்ரூம் குழாய்கள் திருட்டு.. லவ் யூ என எழுதி வைத்துவிட்டு சென்ற திருடர்கள்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில், விலையுயர்ந்த பாத்ரூம் பைப் குழாய்கள் திருடப்பட்டிருக்கின்றன. குழாய்களை திருடியவர்கள், ஐ லவ் யூ என எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மற்ற எந்த வழக்குகளில் சிக்குவதை விடவும், திருட்டு வழக்கில் சிக்குபவர்களைதான் காவல்துறை சிறப்பாக கவனித்து அனுப்பும். அப்படி இருந்தும் கூட, இந்த திருடர்கள் தங்கள் கடமைகளிலிருந்து கொஞ்சம் கூட பின்வாங்குவதாக தெரியவில்லை.

கை தேர்ந்தவர்கள்
இந்த தொழிலில் புரொபெஸ்னல்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் திருட்டை வெறும் தொழிலாக செய்வதை தாண்டி, அதை பொழுது போக்காகவும், தன் திறமையை நிரூபிப்பதற்காகவும் செய்கிறார்கள். அப்படியானவர்கள்தான் காங்கிரஸ் அலுவகத்திற்குள் புகுந்த கைவரிசையை காட்டியிருக்கிறார்கள். அவர்கள் பணத்தையோ, முக்கியமான டாக்குமென்ட்டையோ திருடவில்லை. வெறுமென பாத்ரூம் குழாய்களை திருடியிருக்கிறார்கள்.
பாத்ரூம் குழாய்கள்
காங்கிரஸ்தான் செழிப்பானவர்கள் இருக்கும் கட்சி ஆச்சே! எனவே அம்பிகாபூரில் உள்ள அதன் மாவட்ட அலுவலகமும் பார்த்து பார்த்து கட்டப்பட்டிருக்கிறது. புதியதாக கட்டப்பட்ட இந்த அலுவலகத்தின் வேலைப்பாடுகள் வாயை பிளக்கும் வகையில் இருந்திருக்கின்றன. இதை பார்த்த திருடர்கள் சட்டென பாத்ரூமுக்குள் புகுந்திருக்கிறார்கள். அங்குள்ள 72 குழாய்களை கழற்றி சாக்கு பையில் போட்டு அள்ளி சென்றிருக்கிறார்கள்.
போகும்போது சும்மா போகாமல் தரையில் லவ் யூ என்று எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். இதுதான் கதர் தலைகளை டென்ஷன் ஆக்கியிருக்கிறது.
டென்ஷன் ஆன கதர் தலைகள்
இந்த அலுவலத்தில் இதுபோன்று திருட்டு நடப்பது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன் 2 முறை இதேபோல திருட்டு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இது 3வது சம்பவம். இது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், "திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அவசரமின்றி நிதானமாக தங்கள் வேலையை செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு பயமோ, பதற்றமோ கொஞ்சம் கூட இல்லை. தரையில் லவ் யூ என்று எழுதி சென்றிருப்பது போலீசாருக்கு விடுக்கப்பட்ட சவால். திருடர்களை உடனே கண்டுபிடிக்க வேண்டும்" என்று கூறியிருக்கின்றனர்.
உடனே கண்டுபிடிக்க வேண்டும்
திருட்டு குறித்த தகவல் கிடைத்ததும், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணா பதக், சம்பவ இடத்திற்கு சென்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார். நகரில் செயல்படும் போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் சமூக விரோத சக்திகளுக்கு இதில் தொடர்பு இருக்கக்கூடும் என அவர் சந்தேகிக்கிறார்.


Click it and Unblock the Notifications
