மன்னிப்புதான் தீர்வு! ராஜகண்ணப்பனுக்கு எகிறும் பிரஷர்! டெல்லி டிரிப் முடியட்டும்.. முதல்வர் குறி?
சென்னை: பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தம் அதிகரித்து வருகிறது. அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சமீபத்தில் முதுகுளத்தூர் ஒன்றிய நிர்வாகியான ராஜேந்திரன் என்பவரை "எஸ்சி" என்று கூறி ஜாதி ரீதியாக திட்டியதாக எழுந்த புகாரை அடுத்து ராஜகண்ணப்பன் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜாதி ரீதியிலான புகாரை தொடர்ந்து அவரின் இலாக்கா மாற்றப்பட்டுள்ளது.

கோபம்
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன் தேவேந்திர குல வேளாளர் இனத்தை சேர்ந்தவர். இதனால் தற்போது தேவேந்திர குல வேளாளர் அமைப்பினர் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக களமிறங்கி உள்ளனர். எங்கள் பிரிவினரை அவமதித்துவிட்டார். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதாது. அவர் மீது இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிய வேண்டும் என்று தேவேந்திர குல வேளாளர் பிரிவினர் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.

ராஜகண்ணப்பன்
இது தொடர்பாக தேவேந்திர குல வேளாளர் அமைப்பின் இளைஞர் பிரிவினர் முதுகுளத்தூர் முழுக்க பல்வேறு போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். அதில், தேவேந்திர குல வேளாளர் இனத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவமதித்துவிட்டார். எங்கள் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை அவமதித்து மோசமாக நடத்தி இருக்கிறார். ராஜகண்ணப்பன் இப்படி இழிவாக பேசியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

தேவேந்திர குல வேளாளர்
அவர் உடனே இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல் அவரின் பதவியை பறிக்க வேண்டும். அவர் அமைச்சராக நீடிக்க கூடாது. இதுதான் ஒரே தீர்வு. அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அவர் ஜாதிய ரீதியான வன்மத்தை காட்டி இருக்கிறார் என்று தேவேந்திர குல வேளாளர் இளைஞர் அமைப்பினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

மன்னிப்பு
இந்த நிலையில் ராஜகண்ணப்பன் விஷயம் காரணமாக ஆளும் தரப்பிற்கு அழுத்தம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. முக்கியமாக பிறப்படுத்தப்பட்ட பிரிவினர் இடையே இந்த விவகாரம் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது போக போக்குவரத்துத்துறையின் துணை ஆணையர் நடராஜனின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் பல கட்டுகள் சிக்கின. இதிலும் அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.

ஸ்டாலின் டெல்லி
அதோடு சமீபத்தில் மீடியா ஒன்று இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பன் கோபமாக நடந்து கொண்டது சர்ச்சையாகி உள்ளது. அடுத்தடுத்து இவரின் செயல்கள் அரசுக்கு சிக்கலை, விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இதனால் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் முடிந்ததும் இதில் ஒரு நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்படுகிறது. டெல்லி டிரிப் முடியட்டும்.. என்று முதல்வர் கூறியதாக தகவல்கள் வருகின்றன. மூன்று நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.

டெல்லி பயணம்
இந்த பயணம் முடிந்ததும் அவர் தமிழ்நாட்டிற்கு வந்து இது தொடர்பாக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் அமைச்சரவை கூட்டம் நடக்கலாம். ஜாதி ரீதியிலான பிரச்சனை என்பதால் இது பெரிதாகும் வாய்ப்புகள் உள்ளன. அமைச்சர் ராஜகண்ணப்பனை நீக்கவில்லை என்றால் மாவட்டம்தோறும் போராட்டம் நடத்துவோம் என்றும் தேவேந்திர குல வேளாளர் அமைப்பினர் கூறி உள்ளதால் முதல்வர் ஸ்டாலின் விரைவில் இதில் முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications