3% உள் ஒதுக்கீடு கொடுத்தது திமுக? பாஜக EWS தானே கொடுத்தது? எல்.முருகனுக்கு ஷாநவாஸ் கேள்வி
சென்னை: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அருந்ததிய மக்களுக்கு 3% உள் ஒதுக்கீடு கொடுத்ததைப் போல் பாஜக ஆட்சி செய்துவரும் மாநிலங்களில் பட்டியலின மக்களுக்கு ஏதாவது உள் ஒதுக்கீடு கொடுத்துள்ளதா? அது பற்றி எல்.முருகன் விளக்கம் அளிக்க முடியுமா? என்று விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பாஜக மத்திய அமைச்சர் எல்.முருகன் Vs திருமாவளவன் என்று தமிழக அரசியல் களம் திடீரென்று ஒரு யூ டர்ன் போட்டிருக்கிறது. தலித் முதல்வர் என்ற ஒரு புதிய கோஷத்தை விசிக தரப்பு முன்வைத்து வரும்வேளையில், அதற்குள் ஒரு அருந்ததியர் Vs தலித் என்ற பாகுபாட்டை எல்.முருகன் கையில் எடுத்துள்ளார்.

தமிழக அரசு வழங்கிய அருந்ததியர் பிரிவினருக்கான 3% உள் ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்த நிலையில், அதை எதிர்த்து விசிக மனுத்தாக்கல் செய்திருந்தது. அப்போதே தலித் அரசியல் கட்சியான விசிக ஏன் இந்த உள் ஒதுக்கீட்டை எதிர்க்கிறது? இதுதான் சமூகநீதியா என சிலர் விமர்சித்திருந்தனர்.
நேற்று ஊடகத்தினரைச் சந்தித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், "திருமாவளவன் இரட்டை வேடம் போடுகிறர். அருந்ததியர் இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டவர் எப்படி தலித் மக்களின் தலைவராக இருக்கமுடியும்? எனவே திருமாவளவன் முதல்வராக முடியாது. திருமாவளவன் அருந்ததியச் சமூகத்தினருக்கு ஒரு சீட்டுகூட கொடுக்கவில்லை" என்று ஒரு விமர்சனத்தை வைத்துள்ளார். அதற்கு, திருமாவளவன், "எல்.முருகன் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. அவர் ஆர்.எஸ்.எஸ்காரர்" என்று கூறியிருந்தார்.
அதற்கு எல்.முருகன், "இடஒதுக்கீடு பற்றி பேச திருமாவளவனுக்குத் தகுதியில்லை. அவர் என்னை ஆர்.எஸ்.எஸ்காரர்" என்று கூறியுள்ளார். நான் அந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்பதற்காகப் பெருமைப்படுகிறேன். அருந்ததியருக்கான இடஒதுக்கீட்டை நாங்கள் சட்டரீதியாகப் போராடிப் பெற்றுள்ளோம்" என்று பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் எல்.முருகன் Vs திருமாவளவன் சர்ச்சை குறித்து விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், "முன்னாள் முதல்வர் கருணாநிதி அருந்ததியச் சமூகத்தினருக்கு 3% உள் ஒதுக்கீடு கொடுத்தார். அதை பாஜக கொடுக்கவில்லை. பாஜக ஆளும் மாநிலங்கள் அருந்ததிய மக்களுக்கு 3% உள் ஒதுக்கீட்டை கொடுத்திருக்கிறதா? அல்லது வேறு சமூகத்தினருக்காவது பாஜக கொடுத்துள்ளதா? ஈடபுள்யூ பிரிவுக்கு இடஒதுக்கீடு கொடுத்தது. அது எந்தச் சமூகம்? பாஜக கொடுத்த ஒரே இடஒதுக்கீடு இதுதான். அப்படி என்றால் பாஜக யாருக்கான கட்சி?

எந்த ஒரு அடித்தட்டு சமூகத்திற்கும் இடஒதுக்கீடு வழங்காத பாஜக,எல். முருகனுக்கு ஒரு இடம், திரெளபதி முர்முக்கு ஒரு இடம், மோடிக்கு ஒரு இடம் என தனிநபர்களுக்கு இடத்தை வழங்கி இருக்கிறது. இது சோஷியல் ஜஸ்டிஸ் இல்லை. சோஷியல் இன்ஜினியர் பாலிடிக்ஸ். சரி, அருந்ததியச் சமூகத்திற்கு முருகன் செய்தது என்ன? பட்டியலின மக்களுக்கு முருகன் செய்தது என்ன? வேங்கை வயல் பிரச்சினை பற்றி முருகன் போராட்டம் நடத்தினாரா? அங்கே களத்திற்குப் போனது யார்? திருமாதான் போனார். வேறு யார் வந்தார்கள்? அவரை ஏன் தலித் தலைவர் என முருகன் சுருக்கப் பார்க்கிறார்? பாஜகவின் திட்டம் என்ன? " என்று பேசியுள்ளார்.
அதேநேரம் நாதக சீமான், "திருமாவளவனின் முதல்வர் கனவு பலிக்காது என்று சொல்வதற்கு முதலில் இந்த எல் முருகன் யார்? திருமாவளவன் முதல்வராவதை நான் வரவேற்கிறேன். அதற்கு அவருக்குத் தகுதி இருக்கிறது. அதற்காக ஒரு தமிழனாக, என்னை விடப் பெருமையும், மகிழ்ச்சியும் அடையும் நபர் வேறு யாரும் இருக்கவே முடியாது. எனவே அவரை எப்படியாவது முதல்வராக்குவோம். எல் முருகன் இரண்டு முறை மத்திய அமைச்சராகும் போது திருமாவளவன் முதல்வராக முடியாது?" என்று பேசி இருந்தார்.
அது பற்றி ஷாநவாஸ், "அருந்ததியர் மக்களை தமிழர்களாக ஏற்க மறுக்கிறார் சீமான். அந்த மக்கள் பின் தங்கிய அடித்தட்டு மக்கள் என்பதை மறந்துவிட்டு வேறு மொழி பேசக்கூடியவர்கள் என அவர்களை ஒதுக்குகிறார் சீமான். ஆகவே, அவர் திருமாவை ஆதரிப்பதில் ஒரு உள்நோக்கம் இருக்கிறது. விசிக யாரையும் மொழி அடிப்படையில் பிரித்துப் பார்க்கும் கட்சியல்ல. தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் மக்களை நாங்கள் தமிழர்களாகவே பார்க்கிறோம். எந்த லேப்க்கும் சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்த மாட்டோம்" என்கிறார்.












Click it and Unblock the Notifications