பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.. அந்த வரிகளை கவனித்தீர்களா?
சென்னை: மூன்றாவது முறையாக நமது நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு வாழ்த்து தெரிவித்தார். அந்த வாழ்த்து செய்தியில் உள்ள வரிகளை நீங்கள் கவனித்தீர்களா? அதன் விவரங்களை இப்போது பார்ப்போம்.
இந்தியாவில் லோக்சபா தேர்தல் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடந்தது. இதில் பாஜக மட்டும் தனித்து 239 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த இரண்டு முறை அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலில் அமர்ந்த பிரதமர் மோடி இந்த முறை கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றிருந்தால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு ஆட்சியமைக்க குடியரசுத் தலைவரிடம் உரிமை கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிரதமர் மோடியை ஆட்சியமைக்குமாறு அழைப்பு விடுத்தார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நரேந்திர மோடிக்கு நேற்று இரவு பிரதமருக்கான பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதையடுத்து நரேந்திர மோடி, 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து 30 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்கள் 5 பேர் உள்பட 71 அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். புதிய அமைச்சர் சபையில் தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்பட பல்வேறு கூட்டணி கட்சிகளை சேர்ந்த 11 பேர் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், எல்.முருகன் ஆகிய 3 பேர் மீண்டும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பாஜக கூட்டணி வெற்றி பெறாத நிலையில், வேறு மாநிலங்களில் மாநிலங்களவை மூலம் எம்பிக்களாக தேர்வான நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், எல்.முருகன் மூன்று பேரும் அமைச்சர்கள் ஆகி உள்ளனர்.
நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமர் ஆகி உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்த தெரிவித்தனர். அதன்படி தமிழக முதல்வர் முக ஸ்டாலினும் நேற்று வாழ்த்து தெரிவித்தார். தனது வாழ்த்து செய்தியில், "தொடர்ச்சியாக 3வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமராக நீங்கள் அரசியலமைப்பை நிலைநிறுத்தவும், நாட்டின் மதச்சார்பின்மையை பராமரிக்கவும், கூட்டாட்சி தத்துவத்தை மேம்படுத்தவும், மாநில உரிமைகளை மதிக்கவும், நமது ஜனநாயகத்தை பாதுகாக்கவும் உண்மையுடன் பாடுபடுவீர்கள் என நம்புகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.
பொதுவாக பாஜக மீது திமுக வைத்து வரும் குற்றச்சாட்டுகளை மையப்படுத்திய வாழ்த்துக்களை முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசியலமைப்பை நிலைநிறுத்த வேண்டும். நாட்டின் மதச்சார்பின்மையை பராமரிக்க வேண்டும்.. கூட்டாட்சி தத்துவத்தை மேம்படுத்த வேண்டும்.. மாநில உரிமைகளை மதிக்க வேண்டும் என்பதை ஸ்டாலின், பாஜக தலைமையிலான அரசுக்கு பல முறை வலியுறுத்தியுள்ளார். அதைத்தான் வாழ்த்து செய்தி வடிவில் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications