"டோட்டலா மறைச்சிட்டாங்களே பாத்தீங்களா? போட்டோ எங்கே".. பொங்கிய என்.ஆர். தனபாலன்.. கவனிக்கும் கதர்கள்
தமிழக காங்கிரஸுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சியின் என்ஆர் தனபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: காமராஜர் படத்தையும் புகழையும், இருட்டடிப்பு செய்து அவருடைய பெயரை உச்சரிக்காத அரசியல்வாதிகளை புறந்தள்ள தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்" என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆவேசமாக தெரிவித்துள்ளது.
பெருந்தலைவர் காமராஜருக்கு சிறு இழுக்கு என்றாலும்சரி, உடனே கொந்தளித்து விடுவார் என்ஆர் தனபாலன்.. இப்படித்தான், கடந்த மாதம், தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் (கலை பண்பாட்டு இயக்கம்) சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா -இசை சங்கமம் நடைபெற்றது..
இதில் திமுகவின் துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ ராசா பங்கேற்று பேசினார். வழக்கம்போல் திராவிடம் குறித்து விரிவாக இந்த கூட்டத்திலும் பேசிய ஆ.ராசா, தமிழ்நாடு பெயர் விவகாரம் குறித்தும் பேசினார்.. அதுதான் தற்போது சர்ச்சையாக வெடித்துவிட்டது.

பச்சைத்தமிழர்
ஆ.ராசா அப்போது பேசும்போது, "காமராஜர் பல அணைகளை கட்டினார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் வைக்க முடியவில்லையே. அது அவருக்கு மிகப்பெரிய குறைபாடாக போய்விட்டது. காமராஜருக்கு எத்தனையோ பெருமைகள் என்பது உண்டு. 6 முறை நாடாளுமன்ற உறுப்பினர். காங்கிரஸ் கட்சியின் தலைவர். 2 பிரதமர்களை உருவாக்கியவர். பல ஜனாதிபதிகளை உருவாக்கியவர். காமராஜர் தமிழ்நாட்டு மக்களை நேசித்தவர். பெரியாருக்கு பச்சை தமிழர் என அடையாளம் கொடுத்தவர். ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் தமிழ்நாடு என்ற பெயரை ஏற்று கொள்ளவில்லை. அதனால் அவருக்கு வீழ்ச்சி தொடங்கியது. இப்போது தமிழ்நாடு என சொல்ல சிலர் பயப்படுகிறார்கள். அவர்களுக்கும் வீழ்ச்சி தொடங்கி உள்ளது'' என்று ஆ.ராசா பேசியிருந்தார்.

பொய்த்தகவல்கள்
ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு நாடார் அமைப்புகள் ஆவேசமாகிவிட்டன... இது தொடர்பாக சென்னையில் நாடார் சங்க நிர்வாகிகள் கூட்டமும் உடனடியாக கூடியது.. அதில், தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் தனபாலன் பேசும்போது, "பெருந்தலைவர் காமராஜரை பற்றி பேசுவதற்கு திமுகவினருக்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது.. மேடைகளில் பொய்யான தகவல்களை பொதுமக்களிடம் பேசி அதை மீடியாக்களில் பரப்ப வேண்டும் என்று ஒரு முயற்சி வரலாறை திரிக்க பார்க்கின்றன.. திமுகவினரின் உண்மையான முகமூடி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தன் பேச்சிற்காக ஆ.ராசா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

என்ஆர் தனபாலன்
அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவருக்கு எதிராக கருப்பு கொடியும் காட்டப்படும். அவர் பொது மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் அவருடைய வீட்டை முற்றுகையிட்டு மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் நடத்துவோம்" என்று கூறியிருந்தார்.. இந்த நிலையில், இன்னொரு குற்றச்சாட்டினை காங்கிரஸ் கட்சி மீது என்ஆர் தனபாலன் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் ஒரு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.. அந்த அறிக்கையில், "காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு நடவடிக்கை குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்ட விளம்பரங்களில் பெருந்தலைவர் காமராஜர் படம் இடம் பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது.

இருட்டடிப்பு
தமிழ்நாட்டில் தேர்தல் சமயங்களில் மட்டும் காமராஜர் படத்தை சிறிய அளவில் பயன்படுத்தி காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பேசும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் மற்ற நேரங்களில் அவரது படத்தையும், பெயரையும் மறைக்கிறார்கள். காமராஜர் பெயரையும், புகழையும் மறைக்க நினைக்கும் காங்கிரஸ்காரர்களின் எண்ணங்கள் காங்கிரஸ் கட்சியை அழிவு பாதைக்கு அழைத்து செல்லும் என்பதை உணர வேண்டும். இளைஞர்கள் காமராஜர் போன்ற அரசியல்வாதிகளை தேட ஆரம்பித்து விட்டார்கள். எனவே காமராஜர் படத்தையும் புகழையும், இருட்டடிப்பு செய்து அவருடைய பெயரை உச்சரிக்காத அரசியல்வாதிகளை புறந்தள்ள தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications