எங்க.. பத்திர ஆவணங்கள் ஆன்லைனில் கிடைக்கலையே.. எங்கதான் தேடுவோமோ? குமுறும் 'எரியோடு' கிராமம்!
சென்னை: பத்திரப் பதிவை எளிமையாக்கிவிட்டோம்; பத்திர நகல்களை எளிதாக ஆன்லைனில் கட்டணம் செலுத்தி வாங்கிவிடலாம்; பட்டா மாறுதல் எளிதானது; வீட்டில் இருந்தபடியே பட்டா மாறுதல் செய்யலாம்.. 5 நிமிடத்தில் பட்டா மாறுதல் நிச்சயம் என்பதெல்லாம் காதில் தேனாக பாயக் கூடியதுதான்.. ஆனால் நடைமுறையில் இன்னமும் என்ன சிக்கல்கள் இருக்கிறது தெரியுமா?
நான் திண்டுக்கல் மாவட்டம் எரியோடு கிராமத்துக்குட்பட்ட சிறு கிராமத்தைச் சேர்ந்தவன். எனக்கு ஒரு சர்வே எண்ணின் வில்லங்க சான்றிதழ் மற்றும் பத்திர அசல் நகல் தேவைப்பட்டது. இதனை தமிழ்நாடு அரசின் https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளத்தில் தேடினேன்.

https://tnreginet.gov.in/portal/ இந்த இணையத்தில் எந்த ஒரு நபரும் எளிதாக வில்லங்க சான்றிதழைப் பெற முடியும் என்பதால் மண்டலம், மாவட்டம் ஆகியவற்றை பதிவிட்ட பின்னர் சார்பதிவாளர் அலுவலகத்தை தேர்வு செய்ய முயற்சித்தேன். எங்களுக்கு தெரிந்தவரை தற்போது வரை எரியோடு கிராமத்துக்கு வடமதுரைதான் சார்பதிவாளர் அலுவலகம்தான். 1980-ல் இருந்து 2000-ம் ஆண்டு வரையிலான வில்லங்க சான்றிதழைப் பார்க்க போன எனக்கு கிடைத்தது இந்த பதில்:
"எரியோடு கிராமத்திற்கான தரவு கிடைக்கும் காலம்
வடமதுரை சார்பதிவாளர் அலுவலகம் : 01-Jan-1975 முதல் 14-Jul-1981 வரை
எரியோடு (மூடப்பட்டது) சார்பதிவாளர் அலுவலகம் (எ£¤யோடு) : 01-Jan-1988 முதல் 31-May-2003 வரை
வடமதுரை சார்பதிவாளர் அலுவலகம் (எரியோடு) : 01-Jun-2003 முதல் நாளது தேதி வரை
மேற்கண்ட காலங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்கவும்.
எரியோடு நகரம் கிராமத்திற்கான வில்லங்கச்சான்று விவரங்களை 01.01.1975 முதல் பெற, வெவ்வேறு சார்பதிவகத்தில் மேற்கண்ட காலத்தின் அடிப்படையில் தனித்தனியாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது."
சரி என வில்லங்க சான்றிதழை இப்படியே பெற்றுவிட்டோம்.
இப்படி விண்ணப்பித்து வில்லங்க சான்றிதழைப் பெற்றதில் பத்திர பதிவு ஆவண எண் 167/1988 என்பதாகும்.

இப்போது https://tnreginet.gov.in/portal/ இதே இணையதளத்தில் பதிவு செய்து அசல் பத்திர நகலை கட்டணம் செலுத்தி பெற விண்ணப்பிக்கும் போது "எரியோடு மூடப்பட்டது" என்ற சார்பதிவாளர் அலுவலகத்தை தேர்வு செய்தால் "தேடுகிற ஆவணங்கள் இல்லை" என பதில் வந்தது. ஒருவேளை வடமதுரை சார்பதிவாளர் அலுலகத்தில் இருக்கும் என இதே 167/1988 என்ற பத்திர ஆவண எண்ணுக்கு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தேன். எனக்குக் கிடைத்ததோ வடமதுரை அருகே உள்ள அய்யலூர் கிராமத்தில் யாரோ ஒருவரது பத்திர நகல்தான்.
அப்படியானால் "15- ஜூலை- 1981 முதல் 31 டிசம்பர் 1987-ம் ஆண்டு வரையில் எரியோடு கிராமத்துக்குட்பட்ட மக்கள் தங்களுக்கு தேவையான பத்திர அசல் நகலை எப்படி பெறுவது?
வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் வேறு ஒரு ஆவணம் வருகிறது?
"15- ஜூலை- 1981 முதல் 31 டிசம்பர் 1987-ம் ஆண்டு வரையிலான" ஆவணங்கள் என்னதான் ஆனது? எங்கே பெறுவது? என்பதையாவது https://tnreginet.gov.in/portal/ இந்த இணையதளத்தில் தமிழ்நாடு அரசு இடம் பெறச் செய்தாக வேண்டும். இல்லையெனில் இந்த பத்திரங்களை தேடி அலைகிற பொதுமக்கள் நிலைமை என்னவாகும்? இந்த கால கட்டம் தொடர்பான சொத்து பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண்பது? இதுதான் எரியோடு கிராம மக்களின் குமுறலாகும்.












Click it and Unblock the Notifications