சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வ.உ.சி.பெயர்- திண்டுக்கல் மாநகர தமிழ்ச் சங்கம் வலியுறுத்தல்
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வ.உ.சி. பெயரை சூட்ட வேண்டும் என்று திண்டுக்கல் மாநகரத் தமிழ்ச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாநகரத் தமிழ்ச் சங்கம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் முதல் நிகழ்வாக இசைத் தமிழ் ஆய்வறிஞர் ஆபிரகாம் பண்டிதர் நினைவேந்தல் மற்றும் தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி பங்கேற்றார்.

இசை ஆய்வாளர் மம்மது, கட்டுரையாளர் என். ராமகிருஷ்ணன், சுளூந்தி எழுத்தாளர் முத்துநாகு, எழுத்தாளர் புலியூர் முருகேசன், கவிஞர் சத்திய சோதி ஆகியோருக்கு விருதுகளும் பணப் பரிசும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, திண்டுக்கல் மாநகரத் தமிழ்ச் சங்கத் தலைவர் அமலாதேவி, தமிழாய்வாளர் துரைப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: உலகெங்கும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை உள்ள பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கிட வேண்டும் .இதனை ஒரு கோடி தமிழ் வளர்ச்சி நிதியாகவும், ஒரு கோடிக்கு புத்தகங்களாகவும் வழங்கி ,தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இதேபோல் வெளிமாநில பல்கலைக்கழகத்திற்கும் வழங்க வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

தியாகச் செம்மல் வ .உ .சிதம்பரனாரின் 150 பிறந்தநாள் அரசு விழாவாககொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் முடிவை வரவேற்று,அவரின் நினைவை என்றென்றும் போற்றும் வகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு, "வ. உ. சிதம்பரனார் ரயில் நிலையம் எழும்பூர்"என்று பெயர் சூட்ட சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது .

தாய்மொழியை வலியுறுத்தும் ஒன்றிய அரசு தமிழகத்திலுள்ள ஒன்றிய அரசு பள்ளிகளில் மாநில மொழியான தமிழை ஒரு பாடமாக அறிவித்து, உரிய தமிழ் ஆசிரியர்களை நியமிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது .
காலியாக உள்ள தமிழாசிரியர் பணியிடங்களை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நிரப்பிட கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியை முழுமையாக காண:












Click it and Unblock the Notifications