விஜய் 1 படத்திற்கு ரூ.200 கோடி வாங்குறாரே! அதுல மக்களுக்கு நல்லது செய்யலாமே? தேவயானி கணவர் தாக்கு
சென்னை: படத்திற்கு 200 கோடி ரூபாய் வாங்குறீங்களே, வருஷத்திற்கு 2 படம் நடிச்சி, அதுல ரூ 100 கோடியை நீங்க வச்சிக்கிட்டு மீதி ரூ 300 கோடியில் நல்லது பண்ணலாமே, யார் வேண்டாம்னு சொன்னது, சினிமாவை போல் அரசியலுக்கும் வந்து ஆள பார்ப்பது நடக்காது என விஜய்க்கு இயக்குநர் ராஜகுமரன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இயக்குநரும் தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மக்களுக்கு நல்லது பண்ணதான் அரசியலுக்கு வரேன்னு சொன்னா அத நான் நம்ப மாட்டேன். நல்லது செய்யணும்னா அதான் படத்திற்கு ரூ 200 கோடி வாங்குறீங்களே!

வருஷத்திற்கு 2 படம் நடிச்சிட்டு 100 கோடிய உங்களுக்கு வச்சிக்கிட்டு மீதி 300 கோடி ரூபாயில் மக்களுக்கு நல்லது பண்ணுங்களேன். சினிமாவில் ஆண்ட மாதிரி அரசியலிலும் வந்து நாட்ட ஆள பார்க்குறார். அது நல்லது இல்லை, அது நடக்கவும் வாய்ப்பில்லை என விஜய்யை, ராஜகுமாரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கரூரில் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் கரூர் நகர போலீஸார் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகிய 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
தலைமறைவாக இருந்த இவர்களை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். அப்போது மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்தையும் நிர்மல் குமாரையும் தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள். அவர்கள் இருவரையும் பிடிக்க தனிப்படை தீவிரம் காட்டுகிறார்கள். புஸ்ஸி ஆனந்துக்கு நெருங்கிய நண்பர்கள், நெருங்கிய தவெக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன் தினம், அதாவது கரூர் சம்பவம் நடந்து 3 நாட்கள் கழித்து விஜய் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: என் வாழ்க்கையில் இது போன்ற சூழலை சந்தித்ததில்லை. மனது முழுக்க வலி இருக்கிறது. வலி மட்டும்தான்.
சுற்றுப்பயணத்தில் என்னை மக்கள் பார்க்க வருவதற்கு ஒரே ஒரு காரணம்தான். அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும் பாசமும். இதற்காக நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அதனால்தான் இந்த சுற்றுப்பயணத்தில் மற்ற எல்லா விஷயங்களையும் தாண்டி மக்களோடு பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் செய்துக் கொள்ளக் கூடாது என்பதுதான் என் மனதில் மிகவும் ஆழமாக இருக்கிறது.
அதனால்தான் அரசியல் காரணங்களை எல்லாம் தவிர்த்துவிட்டு ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் பாதுகாப்பை மட்டுமே நினைவில் வைத்து அதற்கான இடங்களை தேர்வு செய்து , காவல் துறையிடம் அனுமதி கேட்போம். ஆனால் நடக்கக் கூடாதது நடந்து போச்சு!
நானும் மனிதன்தானே. இத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கும் போது அந்த ஊரை விட்டுவிட்டு எப்படி கிளம்பி வர முடியும்? நான் அங்கு திரும்பி போகவே விரும்பினேன். ஆனால் நான் அப்படி சென்றால் அங்கு அதை வைத்து வேறு பதற்றமான சூழல்கள் நடந்து விடக் கூடாது என எண்ணிதான் நான் அங்கு செல்வதை தவிர்த்தேன்.
இந்த நேரத்தில் சொந்தங்களை இழந்து தவிக்கும் அத்தனை குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்ன ஆறுதல் சொன்னாலும் உங்கள் இழப்புக்கு ஈடாகாது என எனக்கு தெரியும். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் விரைவில் நலம்பெற வேண்டும் என இந்த நேரத்தில் நான் வேண்டிக் கொள்கிறேன்.
கூடிய சீக்கிரமே உங்களை நான் சந்திக்கிறேன். இந்த நேரத்தில் எங்களோட வலிகளை புரிந்து கொண்டு எங்களுக்காக பேசிய அரசியல் தலைவர்கள், நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கிட்டதட்ட 5 மாவட்டங்களுக்கு பிரச்சாரத்திற்கு சென்றுள்ளோம். இது போல் அசம்பாவிதங்கள் எதுவுமே நடக்கவில்லை.
கரூரில் மட்டும் இப்படி ஏன், எப்படி நடந்தது. மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கரூரைச் சேர்ந்த மக்கள் உண்மைகளை வெளியே சொல்லும் போது கடவுளே இறங்கி வந்து சொல்வது போல் எனக்கு தோன்றியது.
சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும். எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் போய் பேசியதை தாண்டி எங்கள் தரப்பில் எந்த தவறும் இல்லை. இருந்தாலும் என் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தோழர்கள் மீது முதல் தகவல் அறிக்கை போடுகிறார்கள். சமூகவலைதளங்களில் உண்மைகளை சொல்லும் தோழர்கள் மீதும் எஃப்ஐஆர் போடுகிறார்கள்.
சிஎம் சார் கோபம் இருந்தாலோ பழி வாங்கும் எண்ணம் இருந்தாலோ என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள். நான் ஒன்னு வீட்டிலோ அல்லது கட்சி அலுவலகத்திலோ இருப்பேன். நண்பர்களே, தோழர்களே நமது அரசியல் பயணம் வலிமையுடன் இன்னும் தைரியத்துடன் தொடரும். இவ்வாறு விஜய் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.
கரூரில் தனது பிரச்சாரத்திற்கு வந்த 41 பேர் இறந்த போது அதை பற்றி கிஞ்சித்தும் கவலைக் கொள்ளாமல் அவசர அவசரமாக விஜய் சென்னை புறப்பட்டு வந்தது பெரிய தவறு என்கிறார்கள். இந்த நிலையில் தான் இல்லாவிட்டாலும் அடுத்த கட்ட தலைவர்களையாவது விஜய் சம்பவ இடத்திற்கு அனுப்பியிருக்க வேண்டும். அதையும் அவர் செய்யவில்லை. சரி, 3 நாட்கள் கழித்து விளக்கம் அளிக்கும் போதாவது, என்னை பார்க்க வந்து 41 பேரை இழந்துவிட்டோம், இதற்கு நான் வருந்துகிறேன் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்ற வார்த்தையை சிறிது கூட விஜய் பயன்படுத்தாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications