சமூக நீதிக்கு பாடுபட்டவர்களுக்கு தந்தை பெரியார் விருது... விண்ணப்பிப்பது இப்படித்தான்.. முழு தகவல்!
சென்னை: 2022ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் சமூக நிதியை நிலைநாட்டப் போராடியவர்களில் முக்கியமானவர் தந்தை பெரியார். இட ஒதுக்கீடு, இந்தி திணிப்பு என பல்வேறு விஷயங்களிலும் மாநில உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர் தந்தை பெரியார்.
பெரியாரின் சாதனைகளைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு அவரது பெயரில் பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.

பெரியார் விருது
அதன்படி மாநிலத்தில் சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்புச் செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995 முதலே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2022ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்களை அனுப்பலாம்.

அறிவிப்பு
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்புச் செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000/- விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம்
இவ்விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார். 2022-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்கப் பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, சமூக நீதிக்காகப் பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்கலாம்.

ஆவணங்கள்
தங்களது விண்ணப்பம் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைப்பேசி எண் மற்றும் சமூக நீதிக்காகப் பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். 2022 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2022. ஆகும்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications
