தீபாவளிக்கு கார், பைக்குகளில் சொந்த ஊர் செல்வோர் "இந்த" ரூட்டை தவிருங்கள்! போக்குவரத்து துறை அறிவுரை
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு கார், பைக்குகளில் செல்வோர் பெருங்களத்தூர், தாம்பரம் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என போக்குவரத்து துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தீபாவளி பண்டிகை வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நோன்பு எடுப்பவர்கள் அமாவாசை தினமான நவம்பர் 1ஆம் தேதி எடுப்பார்கள். இதனால் 31, 1, 2, 3 ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அவர்கள் எந்த சிரமமும் இன்றி சொந்த ஊர் சென்று வர ஏதுவாக சிறப்பு பேருந்துகளும் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சென்னையிலிருந்து வரும் 28ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 4,900 சிறப்பு பேருந்துகள் சேர்த்து மொத்தமாக 11,176 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அது போல் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இருந்து 2,910 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 14,086 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மூன்று நாட்களும் இயக்கப்படும் பேருந்துகள் மூலம் 5.83 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என தெரிகிறது.
நவம்பர் 2 முதல் 4 ஆம் தேதி வரையில் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 3,165 சிறப்பு பேருந்துகள் சேர்ந்து மொத்தமாக 9,441 பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. அதேபோல், சென்னையைத் தவிர்த்து, பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,165 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 12,606 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கார், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட இதர வாகனங்களில் சொந்த ஊருக்கு செல்வோர், பெருங்களத்தூர், தாம்பர் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக திருப்போரூர், செங்கல்பட்டு, அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலையில் செல்லலாம் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.
அது போல் பயணிகள் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கும். பயணிகள் ஏதேனும் விவரங்களை அறியவோ புகார் அளிக்கவோ 94450 14436 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அது போல் ஆம்னி பேருந்துகளில் வசூல் வேட்டை நடத்தினால் 1800 425 6151 என்ற எண்ணுக்கு புகார் அளியுங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications