தீபாவளிக்கு சொந்த ஊர் போக டிக்கெட் இல்லையா? கவலையை விடுங்க! ரயில்வே கொடுக்கும் தித்திப்பான செய்தி
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் 8 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில், சென்னை சென்ட்ரல் - நெல்லை, தாம்பரம் - மதுரை, ஈரோடு - தூத்துக்குடி உள்பட 8 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் தங்கி வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு வந்து சொந்த ஊரில் உற்சாகமாக கொண்டாடுவார்கள். இதனால் தீபாவளி பண்டிகைக்கு 3 நாட்களுக்கு முன்பே எல்லோரும் சொந்த ஊருக்கு புறப்படுவார்கள். குறிப்பிட்ட அந்த 3 நாட்களில் மொத்தமாக பலரும் சொந்த ஊர் படையெடுப்பதால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பஸ்களிலும், ரயில்களிலும் கூட்டம் அலைமோதும். பஸ்களில் செல்வதற்காக பேருந்து நிலையம் சென்றால் அங்கு பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். ரயில்களிலும் அன்ரிசர்வ்டு பெட்டியில் கால் வைக்க முடியாத அளவுக்கு கூட்டம் இருக்கும். ரயிலில் கடைசி நேரத்தில் செல்லும் போது அனைவருக்கும் டிக்கெட் எளிதில் கிடைக்காது. 120 நாட்களுக்கு முன்பே புக் செய்தவர்களுக்கு மட்டுமே டிக்கெட் கிடைக்கின்றது. தட்கலில் ஒருநாளைக்கு முன்பு புக் செய்ய முயற்சி செய்தாலும் ஒரு சிலருக்கே ரயிலில் டிக்கெட் கிடைக்கிறது.
இதனால் பண்டிகை காலங்களில் சொந்த ஊர் வரும் பயணிகள் பலரும் பரிதவித்து வருகிறார்கள். பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்க தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்களை ரயில்வே அறிவிக்கும். அந்த வகையில் தான் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கவும், பயணிகள் மகிழ்ச்சியுடன் சொந்த ஊர் செல்ல வசதியாகவும் சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது.
நடப்பு ஆண்டில் தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் சிரமம் இன்றி பயணிக்க தமிழகத்தில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு 7 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
* சென்னை சென்ட்ரல் டூ நாகர்கோவிலுக்கு சென்னை எழும்பூர், செங்கல்பட்டு விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக ஒரு சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே முடியு செய்துள்ளது
* சென்னை சென்ட்ரல் டூ நெல்லைக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறபட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, தென்காசி வழியாக நெல்லை சென்றடையும்.
* சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த ரயிலானது விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை வழியாக இயக்கப்படும்.
* தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு, செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.
* சென்னை சென்ட்ரல் டூ கோவைக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக கொவைக்கு இயக்கப்படும்.
* ஈரோட்டில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலானது கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக தூத்துக்குடிக்கு இயக்கப்படும்.
* திருவனந்தபுரம் வடக்கு கொச்சுவேலியில் இருந்து பெங்களூருக்கு எர்ணாகுளம், கோவை, ஜோலார்பேட்டை(புறவழி) வழியாக ஒரு சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. மேற்கண்ட 8 சிறப்பு ரயில்களும் இந்த மாத இறுதியில் இயக்க ரயில்வே ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் எந்த நாட்களில் இயக்கப்படும்? எத்தனை மணிக்கு புறப்படும்? என்ற அறிவிப்பினை ரயில்வே வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications