ஒடிஷா கோர ரயில் விபத்து- மறுநாளே பூரிஜெகந்நாதர் திருவிழா கொண்டாடுவதுதான் ஆத்திக லட்சணமா? கி.வீரமணி
சென்னை: ஒடிஷா கோர ரயில் விபத்து நிகழ்ந்த மறுநாளே பூரி ஜெகந்நாதர் திருவிழா நடத்தப்பட்டுள்ளதுதான் ஆத்திகத்தின் லட்சணமா என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: நெஞ்சை உலுக்கும் துயரமும், துன்பமும் அடையும் அண்மைக்கால ரயில் விபத்து, ஒடிசா மாநிலத்தில் 2.6.2023 அன்று நடைபெற்ற கோர, கோரமண்டல் விரைவு ரயில் விபத்து. மூன்று ரயில்கள் ஒன்றின்மேல் ஒன்று மோதி - இதுவரை வந்த பலியானோர் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ கணக்குப்படி 275 என்றும், சுமார் 1000-த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள் என்பதும் நம் இதயங்களைக் கசக்கிப் பிழியும் அதிர்ச்சிச் செய்தியாகும்.

இச்செய்தி அறிந்தவுடன், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வழமையாக சென்னையில் தமிழ்நாடு பயணிகள் பலரும் பாதிக்கப்பட்டிருக்கக் கூடுமோ, அவர்களை மீட்டு தமிழ்நாட்டுக் குடும்பத்தினருக்கு நிம்மதி உருவாக்கவேண்டுமே என்ற ஆழ்ந்த மனிதநேயக் கவலையிலும், கடமை உணர்விலும் அமைச்சர்கள் சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரையும், திரு.பணீந்திர ரெட்டி அவர்களுடன் இரண்டு அய்.ஏ.எஸ். அதிகாரிகளையும் கொண்ட ஒரு குழுவினரை தாமதிக்காமல் விரைந்து அனுப்பினார்; வேகமான நிவாரணப் பணிகளிலும், ஆய்வுகளிலும் ஈடுபட்ட அந்தக் குழுவினர் தமிழ்நாட்டிற்குத் திரும்பி முதலைமைச்சரிடம் அறிக்கையை நேரில் தாக்கல் செய்துள்ளனர். ஒடிசா முதலமைச்சரும், அவ்வரசும் புயல் வேகத்தில் பாதிக்கப்பட்டோர் - இறந்தோர் உடல்களை அடையாளம் காணவும், பாதிப்பிலிருந்து தப்பியவர்களுக்கு விமான வசதிகள், வேன் - பேருந்துமூலம் கொல்கத்தா மற்ற இடங்களுக்கு அனுப்பியும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ முகாம் பணிகளையும் செய்திருக்கின்றனர். இப்படிப்பட்ட அசாதாரண மிகப்பெரிய கோர விபத்துக்கு உண்மையான காரணத்தைக் கண்டுபிடித்து, மீண்டும் இதுபோன்று இனிமேல் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்யவேண்டியது - ஒன்றிய அரசின் முக்கிய கடமையும், பொறுப்பும் ஆகும்!
அதேநேரத்தில், மக்களின் பாதுகாப்பினை பொதுநலக் கண்ணோட்டத்துடன் புரிந்து செயல்பட சில படிப்பினைகளையும் இந்த விபத்திலிருந்து ஒன்றிய அரசும், அதன் ரயில்வே துறையும் பெற்று, அவற்றிற்குரிய பரிகார நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வரவேண்டும். சரியான - விபத்துப் பாதுகாப்புக் கருவிகள் - அதற்கெனவே நிதி ஒதுக்கப்பட்டும் சரிவர செய்யாதது ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுவதை ஒதுக்கிவிட முடியாது. மனிதர்களின் தவறா? (Human Failure) அல்லது இயந்திரங்களின் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட தவறா? (Mechanical Failure) நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்க இடமும், நேரமும் இல்லாமல் ஆக்கப்பட்டது சரிதானா? பிரதமர் மோடி அரசு (ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசு) பதவியேற்றவுடன் தனியே ரயில்வே பட்ஜெட் சமர்ப்பிக்கும் முறையையே ஒழித்துவிட்டு, அதனை பொது பட்ஜெட்டோடு - வரவு - செலவுத் திட்டத்தோடு இணைத்ததன்மூலம், ரயில்வேயில் பல வளர்ச்சித் திட்டங்கள், நிலுவைகளை நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நாடு தழுவிய நிலையில் அமல்படுத்த - அவற்றின் தேவை, வளர்ச்சிபற்றி சரிவர புரிந்து விவாதிக்க இடமும், நேரமும் இல்லாமல் ஆக்கப்பட்டது சரிதானா?

தமிழ்நாடு அரசும், முதலமைச்சரின் வேகமும், விவேகமும் எடுத்துக்காட்டானவை! அதற்காக ஒரு நாள் துக்கம்; கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கம் என்ற சரித்திர நிகழ்வையே தள்ளி வைத்து, மனிதநேயமிக்கது 'திராவிட மாடல்' அரசு என்பதை மன்பதைக்கு உணர்த்தியுள்ளார் நமது முதலமைச்சர். இந்த நிலையிலும் நேற்று (4.6.2023) ஒடிசாவில் பூரி ஜெகன்னாதர் கோவில் விழா கோலாகலமாகக் கொண்டாடப்படும் அபிஷேக நிலை. 'கருணைமிக்க' பூரி ஜெகநாதர் விழாக் கொண்டாட்டம் நிறுத்தப்படவில்லை. தந்தை பெரியார் கூற்று ''கடவுளை மற - மனிதனை நினை'' என்பதுதான் விபத்தில் சிக்கிய எஞ்சியவர்களைக் காப்பாற்றியுள்ளது! கடவுள் பக்தர்கள் படிப்பினை பெறவேண்டாமா - கடவுளின் கருணை எப்படிப்பட்டது என்பதை? ஆத்திரப்படாமல் அறிவுடன் பக்தர்கள் சிந்திப்பார்களாக! இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications