கேப்டனின் ஆன்மா மன்னிக்காதா.. தங்கப்பேனா முதல் இரங்கல் வீடியோ வரை.. கலைஞர் மீதான விஜயகாந்தின் பாசம்!
சென்னை: தேமுதிக தொடங்கப்பட்டு 21 ஆண்டு கால அரசியல் வரலாற்றில், முதல்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி நம்பி இருந்தார். அப்போது பழம் நழுவி பாலில் விழப் போகிறது என்றும் பேசி இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் மக்கள் நலக் கூட்டணி அமைக்கப்பட்டது.
தற்போது விஜயகாந்த் மறைவுக்கு பின் நடக்கும் முதல் சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்திருக்கிறது. தேமுதிகவுடன் அதிமுக மற்றும் பாஜக தரப்பில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. ஆனாலும் பிரேமலதா விஜயகாந்த் பிடிவாதமாக திமுக கூட்டணி என்று முடிவு எடுத்திருக்கிறார்.

கருணாநிதி வசனம் பேசிய விஜயகாந்த்
இதனால் தமிழக பாஜக தரப்பில், கேப்டனின் ஆன்மா மன்னிக்காது என்று விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி, ஜெயலலிதா ஆகியோரை விடவும் விஜயகாந்த் முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது அதீத அன்பு கொண்டிருந்தவர். 1987ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான வீரன் வேலுத்தம்பி படத்தில் நடித்தார்.
விஜயகாந்த் திருமணம்
தொடர்ந்து 1988ல் மக்கள் ஆணையிட்டால், 1989ல் வெளியான பொறுத்தது போதும் உள்ளிட்ட படங்களுக்கு கருணாநிதி தான் கதை, வசனம். அப்போது முதலே கருணாநிதி மீது விஜயகாந்த் மிகப்பெரிய மரியாதை வைத்திருந்தார். அதன் உச்சமாக விஜயகாந்த் - பிரேமலதா இடையிலான திருமணத்திற்கு தலைமை தாங்கியதும் கருணாநிதி தான்.
பொன்விழா எடுத்த விஜயகாந்த்
அதன்பின் விஜயகாந்தின் குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்தும் கருணாநிதி தலைமையில் தான் நடைபெற்றது. இதனால் விஜயகாந்த் திமுக ஆதரவாளராகவும் பார்க்கப்பட்டார். தொடர்ந்து 1996ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த், மெரினா கடற்கரையில் கருணாநிதியின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி திரையுலகம் சார்பாக மாபெரும் விழா எடுத்தார்.
தங்கப்பேனா
அந்த விழாவில் கருணாநிதிக்கு தங்கத்தில் செய்யப்பட்ட பேனாவை பரிசாக அளித்தார். அதேபோல் அரசியலுக்கு வந்த பின் திமுகவை விமர்சித்தாலும், கருணாநிதி என்று ஒருமுறை கூட அழைத்ததில்லை. எப்போதும் கலைஞர் என்றே அழைத்து வந்தார். அதுமட்டுமல்லாமல் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட போது, விஜயகாந்த் நேரில் வந்து நலம் விசாரித்து சென்றார்.
விஜயகாந்தின் இரங்கல் வீடியோ
இதன்பின் விஜயகாந்த் தனது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த நேரம்.. திடீரென கருணாநிதி மறைந்தார். இதனால் விஜயகாந்த் உடனடியாக சென்னை வர முடியவில்லை. அமெரிக்காவில் இருந்தவாறே கருணாநிதியின் மறைவை அறிந்து விஜயகாந்த் வெளியிட்ட வீடியோ அனைவரையும் உலுக்கியது. கலைஞர் மறைவை என்னால் தாங்க முடியவில்லை என்று சொல்லியவாறே திடீரென கதறி அழத் தொடங்கினார்.
விமான நிலையம் டூ மெரினா
இது திமுகவினரையும் உலுக்கியது என்று சொல்ல வேண்டும். கருணாநிதி மறைவின் போது நடந்த சம்பவங்களை தொகுக்கும் போது, யாராலும் விஜயகாந்த் வீடியோவை மறக்க முடியாது. அதன்பின் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த விஜயகாந்த், நேராக விமான நிலையத்தில் இருந்து மெரினா கடற்கரை சென்று கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
திமுக கொடுத்த மரியாதை
நள்ளிரவு நேரத்திலும் விஜயகாந்த் சென்று மரியாதை செலுத்தியது இன்றும் திமுகவினரால் பேசப்பட்டு வருகிறது. இதன்பின் விஜயகாந்த் மறைவின் போது, ஆட்சியில் இருந்த திமுக எந்தவித கோரிக்கையும் இல்லாமல் அரசு மரியாதை கொடுத்தது. அதேபோல் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தேவையான ஏற்பாடுகளையும் தானாக வந்து செய்து கொடுத்தது. இதனால் வாழ்நாள் முழுக்க கருணாநிதி மீது விஜயகாந்த் பாசமாக இருந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications