எங்க போய் முடிய போகுதோ தெரியல.. ஆண்ட காட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் அண்ணியார்! இது தான் காரணமா?
சென்னை: சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவிக்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், அதிமுக- திமுக கூட்டணி ஓரளவு செட்டில் ஆகிவிட்டது. ஆனால், தேமுதிக இன்னும் கூட்டணி குறித்து வாய் திறக்கவில்லை. திமுக- காங்கிரஸ் இடையே உரசல் இருக்கும் நிலையில், ஒருவேளை அக்கட்சி வெளியேறினால் தங்கள் டிமாண்டை அதிகரிக்க பிரேமலதா திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் தான், அதிமுக, தவெக, திமுக என எந்த கூட்டணிக்கும் இதுவரை பிரேமலதா விஜயகாந்த் ஓகே சொல்லவில்லை என்கின்றனர். அதே நேரத்தில் 3 கட்சிகளிடமும் பேரம் பேசும் நிலையில், திமுக - அதிமுக தேமுதிகவை கழற்றி விடும் முடிவுக்கு வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக எந்தக் கூட்டணியில் இடம்பிடிக்கப் போகிறது என்ற கேள்வி, தமிழக அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து விவாதமாகவே இருந்து வருகிறது. ஒரு காலத்தில் முக்கிய அரசியல் சக்தியாக இருந்த தேமுதிக, தற்போது யாருடன் கைகோர்க்கப் போகிறது என்பதில் இதுவரை தெளிவான முடிவை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த தேமுதிக, சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதாகவும், ஜனவரி மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டுக்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.

2026 சட்டமன்ற தேர்தல்
ஆனால் மாநாடு முடிந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும், கூட்டணி குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், தொகுதி பேரம் மற்றும் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள கூட்டணியை தேர்வு செய்வதில் பிரேமலதா விஜயகாந்த் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு தரப்புகளும் தேமுதிகவை தங்களது கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதிமுக தரப்பில், எட்டு சட்டமன்றத் தொகுதிகள் வரை வழங்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக திமுக பேரம்
ஆனால் தேமுதிக தரப்பில், 21 சட்டமன்றத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் ஒரு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்ற அளவுக்கு பேரம் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மறுபுறம், திமுக கூட்டணியிலும் தேமுதிகவை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு ஏழு தொகுதிகள் வரை வழங்கலாம் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், பிரேமலதா தரப்பு பத்து சட்டமன்றத் தொகுதிகளுடன், ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் திமுக உரசல்
இந்தச் சூழலில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறினால், அந்த இடத்தை தேமுதிக நிரப்பி, கூடுதல் சீட்களை பெற முடியும் என்ற நம்பிக்கையில்தான் பிரேமலதா விஜயகாந்த் இன்னும் எந்தக் கூட்டணிக்கும் உறுதியான பதில் அளிக்காமல் காத்திருக்கிறார் என கூறப்படுகிறது. அதனால்தான் அதிமுக, தவெக உள்ளிட்ட எந்தக் கூட்டணிக்கும் இதுவரை தெளிவான ஆதரவை அவர் அறிவிக்கவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்ற தகவல்கள் அரசியல் களத்தில் பரவியுள்ளன.
பிரேமலதா விஜயகாந்த்
ஆனால் இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் இதுவரை எந்த அதிகாரபூர்வ முடிவையும் அறிவிக்கவில்லை. ஒருவேளை ராகுல் காந்தி தவெகவுடன் கூட்டணி என அறிவித்துவிட்டால், திமுக கூட்டணியில் தேமுதிகக்கு கூடுதல் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் பிரேமலதா தரப்பில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நம்பிக்கையாலேயே, கூட்டணி முடிவை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் பிரேமலதா விஜயகாந்த் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி நாளை மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
திமுக மற்றும் அதிமுக
அந்த கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களையும் பங்கேற்க வைக்க பாஜக தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாஜக தரப்பை சேர்ந்த சிலர் பிரேமலதாவுடன் பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த தகவலை பிரேமலதா மறுத்துவிட்டார். காங்கிரஸ் எடுக்கும் முடிவை எதிர்பார்த்தே தேமுதிக காத்திருக்கிறது என கூறப்படும் நிலையில், ஒரே நேரத்தில் இரு கூட்டணிகளிடமும் பேரம் பேசும் இந்த நிலைப்பாட்டால், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்பும் தேமுதிகவை விலக்கிக் கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications