8 தொகுதிகள், தனிச் சின்னம்.. மதிமுக எடுத்த முக்கிய நிலைப்பாடு.. வைகோவை சமாளிப்பாரா ஸ்டாலின்?
சென்னை: சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, இந்த முறை தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. லோக்சபா தேர்தலில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டு துரை வைகோ வென்றிருந்த நிலையில், அதே ஃபார்முலாவில் சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிட அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் சூழலில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவரங்கள் எப்போதும் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வழக்கமாக இப்படியான விஷயங்களை முன் கூட்டியே முடிக்கும் திமுக, இம்முறை பல்வேறு காரணங்களால் தாமதம் செய்து வருகிறது.

இருப்பினும் திமுக கூட்டணியில் இருந்து எந்தக் கட்சியும் விலகுவதாக அறிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி மட்டுமே சில வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகிறது. மற்ற கட்சிகளான விசிக, சிபிஐ, சிபிஎம், மக்கள் நீதி மய்யம், மதிமுக, தவாக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் திமுகவுடன் மட்டுமே கூட்டணி என்பதை அறிவித்துவிட்டனர்.
அந்த வகையில் திமுக தரப்பில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு எம்பி தொகுதிக்கு 3 சட்டசபைத் தொகுதிகள் வாரியாக ஒதுக்கீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு கட்சியும் கூடுதல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்மையில் வைகோ தலைமையில் நடைபெற்றது.
அப்போது மாவட்டச் செயலாளர்கள் தரப்பில், இந்த தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர். இதற்கு பின்னணியில் துரை வைகோ இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஏனென்றால் லோக்சபா தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்ட துரை வைகோ, தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்தத் தேர்தலில் மதிமுகவுக்கு 1 சதவிகிதத்திற்கும் அதிக வாக்குகள் கிடைத்தது. இதனால் சட்டசபைத் தேர்தலிலும் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அப்போது மதிமுகவினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4ல் மதிமுக வென்றது.
ஆனால் இம்முறை தனிச் சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கூடுதலாக 2 தொகுதிகளையும் மதிமுக கோரவுள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் போட்டியிட்டால் மதிமுகவுக்கு 3 முதல் 4 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இதனால் தொகுதி பங்கீட்டில் திமுகவுக்கு மிகப்பெரிய அழுத்தம் உருவாகும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications