திமுக + பாஜக கூட்டணி ரெடி.. காங்கிரஸை கழட்டி விட சொல்லிட்டாங்க.. 'பகீர்' கிளப்பிய சி.வி.சண்முகம்!
சென்னை : வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி அமையவுள்ளது உள்ளது என்றும், திமுகவுடன் கூட்டணி வைத்தவர்கள் ஓடப் போகிறார்கள என்றும் அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெய்வேலியில் அதிமுக சார்பில் தமிழக அரசு, என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பியுமான சி.வி.சண்முகம் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பாஜக அரசு சொல்லும் பணிகளை வாயை மூடி தன் தலையில் தூக்கிவைத்து திமுக அரசு செய்து வருகிறது என சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.

அதிமுக ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி அதிமுக சார்பில் நெய்வேலி சுரங்கம் முன்பு என்எல்சி நிறுவனத்தை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் தமிழக அரசுசைக் கண்டித்தும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக சொல்வதை கேட்கும் திமுக
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக எம்.பியும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், "மத்திய பாஜக அரசு சொல்கின்ற பணிகளை வாயை மூடி தன் தலையில் தூக்கிவைத்து திமுக அரசு செய்து வருகிறது. குறிப்பாக என்எல்சி விவகாரத்தில் ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி லாபம் ஈட்டுவதாக நிலங்களை உடனே கையபடுத்த மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது. அதனை தமிழக அரசு செய்து வருகிறது.

டெல்லி சென்றால் கெஞ்சுகிறார்கள்
தமிழகத்தில் இருக்கும்போது திமுகவினர் மத்திய பாஜக அரசை விமர்சித்துப் பேசுகிறார்கள். ஆனால் டெல்லி சென்றால் மத்திய அரசிடம் அய்யா.. அம்மா தாயே.. என்று கெஞ்சுகிறார்கள். 39 எம்.பிக்களும் டெல்லி சென்று பிச்சை எடுக்கிறார்கள். மத்திய அமைச்சர்களிடம் கெஞ்சுவது தான் திமுகவின் சமுகநீதி.

யாரை ஏமாற்றும் வேலை?
என்எல்சி பிரச்சனையை முதல்வர் ஸ்டாலின் தீர்க்கவில்லை என்றால் விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி, கம்யூனிஸ்ட்டுகள் ஆகிய கட்சிகள், திமுக உடனான கூட்டணியை முறித்துக்கொள்ளத் தயாரா? திமுக கூட்டணி கட்சிகள் 26ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருப்பது யாரை ஏமாற்றும் வேலை?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக + பாஜக கூட்டணி
மேலும் பேசிய சி.வி.சண்முகம், "வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக - பாஜக கூட்டணி அமைய உள்ளது. திமுகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் ஓடப் போகிறார்கள். ஒன்று எங்களுடன் கூட்டணிக்கு வாருங்கள், இல்லையென்றால் காங்கிரஸை கழற்றி விடுங்கள். ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் பதவி கொடுத்துவிடுவோம் என பாஜக திமுகவிடம் சொல்லிவிட்டது." எனப் பேசியுள்ளார்.

பரபரப்பு
அதிமுகவுடன் இணக்கமாக இருந்து வரும் பாஜகவை, திமுகவுடன் கூட்டணி வைக்கப் போவதாக அக்கட்சியின் எம்.பி சி.வி.சண்முகம் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக உடனான கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளியேற திட்டமிட்டு வருவதாக கூறப்படும் நிலையில், ஈபிஎஸ் ஆதரவாளர் சிவி சண்முகத்தின் இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications