தமிழக காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்களுடன் ஆலோசனை.. தவெக உடன் கூட்டணி? ஆழம் பார்க்கிறாரா ராகுல் காந்தி!
சென்னை: தமிழக காங்கிரஸ் எம்பி-க்கள் மற்றும் எம்எல்ஏ-க்களை ராகுல் காந்தி சந்திக்க தயாராகி வருவதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே பிரவீன் சக்கரவர்த்தி விவகாரம் திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு இடையில் புகைச்சலை உண்டாக்கி இருக்கும் சூழலில், இந்த சந்திப்புக்கான பின்னணி என்ன என்பது தொடர்பாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இணக்கமாக இருப்பது போல் பார்க்கப்பட்டாலும், திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் புகைந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜய்யுடன் சந்திப்பு நடத்திவிட்டு சென்றிருக்கிறார்.

இருந்தாலும் திமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தலைமை தரப்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனாலும் தமிழக அரசின் கடன் சிக்கலை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிட்டு பிரவீன் சக்கரவர்த்தி சீண்டி இருக்கிறார். இவர் மீது காங்கிரஸ் கட்சி தலைமை இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால் திமுக நிர்வாகிகளுக்கே காங்கிரஸ் தலைமை மீது சந்தேகம் எழுந்துள்ளது.
ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின் பெயரில் தான் பிரவீன் சக்கரவர்த்தி இப்படி செயல்படுகிறாரா என்ற பேசத் தொடங்கி இருக்கின்றனர். இப்படியான சூழலில், ராகுல் காந்தி விரைவில் தமிழக காங்கிரஸ் கட்சியின் எம்பி-க்கள் மற்றும் எம்எல்ஏ-க்களுடன் சந்திப்பு நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ராகுல் காந்தியின் இந்த சந்திப்பு முடிவுக்கான காரணம் என்ன காங்கிரஸ் கட்சியினரே கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் விருத்தாசலம் காங்கிரஸ் எம்எல்ஏவான எம்ஆர்ஆர் ராதாகிருஷ்ணன் ராகுல் காந்தியை விரைவில் சந்திக்க உள்ளதை உறுதி செய்திருக்கிறார். இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை SIR பணிகளை முழுமையாக முடித்து, அதன் விவரங்களை உடனடியாக தலைமைக்கு அனுப்ப அறிவுறுத்தி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதனால் வரைவு வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு SIR பணிகளில் காங்கிரஸ் நிர்வாகிகள் தீவிரமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இருந்தாலும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தவெக கூட்டணி தொடர்பாக ராகுல் காந்தி ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு நிலவரம் குறித்து ராகுல் காந்தி முழுமையாக அறிய விரும்புவதால், இந்த சந்திப்பு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.
அதேபோல் கரூர் விவகாரத்தின் போது தவெக தலைவர் விஜய்க்கு முதல் நபராக போனில் அழைத்து பேசியதே ராகுல் காந்தி தான். இதற்கு பின் விஜய்யை பாஜக பக்கம் செல்லவிடாமல் தடுப்பதற்கான நோக்கம் இருந்தாலும், கூட்டணி கணக்கும் இருந்ததாக பார்க்கப்படுகிறது. இதனால் ராகுல் காந்தியின் தமிழ்நாடு பயணத்தின் தான் திமுக - காங்கிரஸ் இடையிலான உறவு எந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications