வீட்டுக்கே வந்து கண்ணீர் விட்டார்.. விசுவாசத்தை பார்த்து வியந்த திமுக.. ஸ்டாலினை உருக வைத்த தனசேகரன்
சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் இருந்த திமுக நிர்வாகி தனசேகரன்.. திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசியது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
பொதுவாக தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியாகும் போது ஒவ்வொரு கட்சிக்குள்ளும் கோஷ்டி மோதல்கள் வெடிப்பது வழக்கம். எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை, வேட்பாளர் தேர்வில் முறைகேடு என்றெல்லாம் நிறைய கோஷ்டி மோதல்கள் வெடிப்பது வழக்கம்.
திமுக, அதிமுக, காங்கிரஸ் என்று எல்லா கட்சிகளிலும் இந்த முறை கோஷ்டி மோதல் வெடித்து உள்ளன. அதிலும் சென்னை விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளரால் திமுகவிலும் பெரிய அளவில் கோஷ்டி மோதல் நிலவி வருகிறது.

திமுக
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவின் மகன் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதை அப்பகுதி திமுக நிர்வாகிகள் விரும்பவில்லை. இந்த தேர்வுக்கு திமுக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முக்கியம்
முக்கியமாக கடந்த 2011, 2016-ல் தேர்தலில் இங்கு திமுக சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் க.தனசேகரனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இது திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தனசேகரன் வெளிப்படையாக செய்தியாளர்களை சந்தித்து திமுக வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.

தாக்குதல்
அதோடு பிரபாகர் ராஜாவின் காரையும் தனசேகரனின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். வேட்பளார் தேர்வுக்கு எதிராக வெளிப்படையாக இப்படி கருத்து தெரிவித்த தனசேகரன் தற்போது திடீரென மனம் மாறியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தனசேகரன் உருக்கமாக பேசி உள்ளார்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்த தனசேகரன்.. நான் கட்சிக்கு எதிராக செயல்பட மாட்டேன். எப்போதும் கட்சிக்கு ஆதரவாகவே இருப்பேன். வேட்பாளர் தேர்வை நானோ, எனது ஆதரவாளர்களோ விரும்பவில்லை . ஆனால் கட்சியின் முடிவை நான் மதிக்கிறேன். தலைமை முடிவை ஏற்றுக்கொண்டு தேர்தல் பணிகளை செய்வேன் என்று தனசேகரன் குறிப்பிட்டுள்ளார்.

தனசேகரன்
ஸ்டாலினை நேரில் சந்தித்த தனசேகரன் கண்ணீர்விட்டு உருக்கமாக பேசி உள்ளார். எனக்கு சீட் கொடுக்கவில்லை என்றாலும் தலைமைக்கு கட்டுப்படுவேன் என்று கூறியுள்ளார். தனசேகரன் வேறு கட்சிக்கு தாவுவார், தேவையின்றி பிரச்சனை செய்வார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.. தலைமைக்கு கட்டுப்படுவேன் என்று இவர் பேசியது திமுகவினரை நெகிழ வைத்துள்ளது.

ஸ்டாலின்
இவரின் முடிவை பார்த்து ஸ்டாலின் ஒரு பக்கம் உருக்கமாகி உள்ளார். கட்சிக்கு இப்படி விசுவாசமானவர்கள்தான் தேவை என்று கூறியுள்ளாராம். கண்டிப்பாக இவருக்கு விரைவில் கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படலாம், தனசேகரனை மகிழ்விக்கும் வகையில் பொறுப்பு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வருகிறது.


Click it and Unblock the Notifications
