ஒவ்வொரு மாவட்டத்திலும் நியோ டைடல் பூங்கா.. மதுரை, கோவை அருகே புதிய நகரங்கள்.. திமுக வாக்குறுதி!
சென்னை: 2030ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியோ டைடல் பூங்காக்கள், தேவைப்படும் இடங்களில் முழு அளவிலான தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருச்சி, கோவை, மதுரை, சேலம் மாநகராட்சி அருகில் நவீன வசதிகளுடன் புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 25 நாட்களே இருக்கும் நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 524 வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இளைஞர்கள், மகளிரை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி, மதுரை, கோவை மற்றும் சேலம் அருகே நவீன புதிய நகரங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 18 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு அதன் மூலமாக 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் தமிழ்நாட்டின் ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்ந்து உலக வரைபடத்தில் தமிழ்நாடு இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 2030ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தேவைப்படும் இடங்களில் முழு அளவிலான தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுவில் இருக்கும் பெண்களுக்கு பிணையில்லாமல் ரூ.5 லட்சம் கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய தொகையை மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு வழங்குவதன் மூலமாக அவர்களை தொழில் முனைவோராக மாற்ற முடியும் என்று பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து, கடலூர், தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சேலம், திருப்பூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும், 5 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறையை காட்டிலும் இம்முறை திமுக தேர்தல் அறிக்கையில் பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த திட்டங்கள் அதிகரித்துள்ளது. இதனால் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மத்தியில் திமுக தேர்தல் அறிக்கை வரவேற்பை பெறும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications