அந்த போஸ்டர் ஞாபகம் இருக்கா? திமுக தலைமையையே அதிர வைத்த நிர்வாகி அதிமுகவுக்கு தாவல்!
சென்னை: இன்பநிதி பாசறை என்ற பெயரில் போஸ்டர் ஒட்டியதால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட திருமுருகன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மகன் பெயரில் "இன்பநிதி பாசறை" உருவாக்கப்பட்டுள்ளதாகவும் புதுக்கோட்டையில் "இன்பநிதி பாசறை" சார்பில் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் துணை அமைப்பாளர் க.செ.மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க.திருமுருகன் ஆகியோர் தான் இன்பநிதி பாசறை எனக் குறிப்பிட்டு போஸ்டர் அடித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
முதலமைச்சர் ஸ்டாலினின் பேரனும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி திமுகவில் எந்தவொரு பொறுப்பும் வகிக்காத நிலையில் "இன்பநிதி பாசறை" அமைத்த திமுக நிர்வாகிகளான புதுக்கோட்டை மணிமாறன், திருமுருகன் ஆகியோர் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தார்.
இந்நிலையில், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி திருமுருகன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். இன்பநிதி பாசறை என ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகி, லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுகவில் இணைந்துள்ளது புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications