பறந்த அதிரடி உத்தரவு..முதல்வரின் சொந்த ஊரில் இருந்தே தொடங்கிய மாற்றம்.. ராஜினாமா செய்த து.தலைவர்..!
சென்னை : தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுகவினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற திமுக தலைவரின் உத்தரவை அடுத்து அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர்மன்றத் துணைத் தலைவர் பதவியை பாண்டியன் என்பவர் ராஜினாமா செய்துள்ளார்.
நகராட்சித் தலைவர் பேரூராட்சித் தலைவர் நகராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை தங்களின் கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு திமுக தலைமை ஒதுக்கியது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலின் போது கட்சித்தலைமை அறிவிப்பை மீறி ஏராளமான இடங்களில் திமுகவினர், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக போட்டியிட்டு தலைவர் துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை கைப்பற்றினர்.

கட்சிகள் கோரிக்கை
கூட்டணி தர்மத்தை மீறி திமுகவினர் செயல்படுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இதே போல பல சம்பவங்கள் நடைபெற்றது. இந்நிலையில் தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கழக தலைமை அறிவித்ததை மீறி போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும் என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்டாலின் அறிக்கை
கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன். எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கழகத் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிக்கையில் கூறியிருந்தார்.

கூட்டணியினர் வரவேற்பு
இதற்கு கூட்டணிக் கட்சிகள் வரவேற்பு தெரிவித்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்தனர். நாளை திமுகவினர் வெற்றி பெற்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய மாவட்ட செயலாளர்கள் உத்தரவிட வேண்டும் என திமுக தலைமை கூறியுள்ளதாகவும் இதையடுத்து அந்தப் பட்டியலைத் தயார் செய்யும் பணி தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு இல்லாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் திமுகவினர் கொடுத்த ஆதரவை வாபஸ் பெற அறிவுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ராஜினாமா செய்யும் திமுகவினர்
அதே நேரத்தில் முதல்வரின் உத்தரவை அடுத்து திமுகவினர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரமன்ற துணைத் தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் திமுக கவுன்சிலர் பாண்டியன் போட்டியின்றி வெற்றி பெற்றிருந்தார். இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பாண்டியன் அறிவித்துள்ளார். இதே போல் நாளை பல திமுகவினர் தாங்கள் பதவிகளை ராஜினாமா செய்யலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications