மின்துறைக்கே 'ஷாக்' கொடுத்த அதிமுக அரசின் பொய்கள்! - பழங்குடி பகுதிகளில் குறைகளை சரி செய்த ஸ்டாலின்!
சென்னை : ஒன்றரை ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் இலவச மின் இணைப்புகளை வழங்கி சாதனைப் படைத்துள்ளது, திமுக அரசு. சொல்லப்போனால், 1989 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில்தான் இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு முதன்முதலாக இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் அறிமுகமானது. அந்தப் பெருமை தமிழ்நாட்டுக்கு மட்டுமே உண்டு.
தமிழ்நாட்டை திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்தாலும் கடந்த 30 ஆண்டுகளாக இத்திட்டம் தடைபடாமல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதற்குக் காரணம், நாட்டின் உயிர்நாடியான உழவர் குடிமக்களை உள்ளடக்கிய திட்டமாக இது வடிவமைக்கப்பட்டதுதான்.
அதனால்தான், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. அந்தளவு தொலைநோக்குடன் சிந்தித்து செயல்வடிவம் கொடுத்தார், மு.கருணாநிதி.

எந்த மாநிலத்திலும் நடக்காத சாதனை
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெற்றது. அந்தக் காலகட்டத்தில் புதிய மின் இணைப்புக் கேட்டு விண்ணப்பித்த லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு முறையாக மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை. இதனை ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் குற்றச்சாட்டாகவும் திமுக முன்வைத்தது.
''புதிய மின் இணைப்புக்காக கடந்த 10 ஆண்டுகளாக உழவர்கள் காத்துக்கிடக்கும் நிலையே நீடித்தது'' என்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் குறுகிய காலத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் எவ்வித தாமதமும் இன்றி வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி என்றாலே 'மின்வெட்டு' என விமர்சித்து வந்தவர்களுக்கு இந்தச் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறைவான காலவரம்புக்குள் இவ்வளவு இணைப்புகளை வழங்கியதில் திமுக ஆட்சி முன்னணியில் நிற்கிறது. கடந்த காலங்களில் இவ்வளவு மின் இணைப்புகள் வழங்கப்பட்டதில்லை.
இதற்கிடையில், கரூர் மாவட்டத்தில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் 50 ஆயிரம் உழவர் பெருமக்களுக்கு புதிய இலவச மின் இணைப்புகளை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்பே 1 லட்சம் இணைப்புகளை எட்டிவிட்ட நிலையில் கூடுதலாக, 50 ஆயிரம் மின் இணைப்புகளை வழங்கிய செயல், எதிர்க்கட்சியினரை ஆடிப்போக வைத்துள்ளது.
கடந்த 15 மாதகால ஆட்சிக்குள் இப்படியொரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 'மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய செய்தி என்னவென்றால், வேறு எந்த ஆட்சியிலும் இந்தளவுக்கு மின் இணைப்புக்கள் வழங்கப்பட்டதே இல்லை என்பதுதான்' என்கின்றனர் திமுகவினர்.
இன்னும் அழுத்திச் சொன்னால், 'இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும்கூட இந்தளவு மின் இணைப்புக்கள் வழங்கப்படவில்லை' என்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அதனால்தான், 'தமிழக வரலாற்றில் பொன் எழுத்துகளால் எழுதப்பட வேண்டிய நாள் இது' என முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக் காட்டினார்.

99 சதவீத புகார்களுக்குத் தீர்வு
'ஆட்சிக்கு வந்தால், ஓர் ஆண்டில் ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகளை வழங்குவோம்' என்று தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதியாக திமுக கொடுத்திருந்தது. அதன் ஒருபகுதியாக 21.09.2021 அன்று இத்திட்டத்தை முதன்முதலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
அடுத்து வந்த ஆறு மாதங்களுக்குள் ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகள் வேளாண் குடிமக்களுக்கு முறையாகப் போய்ச் சேர்ந்தன. அதிமுகவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில், மொத்தமாகச் சேர்த்து வெறும் 2,20,000 மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால், 'மின்மிகை' மாநிலம் எனப் பிரசாரம் செய்தனர். இதனை புள்ளிவிவர அடிப்படையில் பார்த்தாலும் திமுகவைவிடவும் அதிமுக பின்தங்கியே உள்ளது.
இதுதவிர, திமுக ஆட்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பல சாதனைகளைப் படைத்துள்ளது. குறிப்பாக, நுகர்வோர்களின் குறைகளைக் களைய 'மின்னகம் நுகர்வோர் சேவை மையம்' திறக்கப்பட்டது. இதில் பெறப்பட்ட புகார்களுக்கு 99 சதவீத தீர்வுகள் காணப்பட்டுள்ளன.
மேலும், காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது. இந்திய அளவில் சூரிய ஒளி மின்உற்பத்தியில் தமிழ்நாடு நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இது வெறும் மின்சார பிரச்னை மட்டும் இல்லை. மின் உற்பத்தி எந்தளவுக்குச் சீராக உள்ளதோ அந்தளவுக்கு உணவு உற்பத்தியும் வளமாக உயரும்.
'நீர் உயர வரப்பு உயரும்' என்பது பழமொழி. அந்த நீரை இறைக்க மின்சாரம் தேவை. மின்சாரம், பருவமழை என இவை இரண்டும் இந்த ஆட்சியில் சரியான நேரத்தில் கிடைத்துள்ளது. தான் ஆட்சிக்கு வந்தநாள் முதல் தமிழ்நாட்டில் மழை நன்றாகப் பெய்து வருகிறது என்றும் தனக்கு 'தண்ணீர் ராசி' என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதும் இந்த அடிப்படையில்தான்.
கடந்த 2000 முதல் 2022 ஆம் ஆண்டு வரையான 22 ஆண்டுகால தமிழக வேளாண்மையில் நெல் விளைச்சல் உச்சத்துக்கு உயர்ந்திருக்கிறது. 2021 முதல் 2022 வரையான ஆண்டில் மட்டும் 22,05,470 ஹெக்டேரில் 1,22,22,463 மெட்ரிக் டன் நெல் உற்பத்தியைப் பெருக்கிக் காட்டியுள்ளனர். அதாவது 1.22 கோடி மெட்ரிக் டன் அளவு நெல் உற்பத்தி.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நெல் உற்பத்தி என்பது 1.04 கோடி மெட்ரிக் டன்னாக இருந்தது. இந்த விவரங்கள் மின்வாரிய துறைக்கும் வேளாண்மைக்கும் உள்ள நேரடி பயனை விளக்குகின்றன.

122 வருடங்களில் இல்லாத மழை
அடுத்ததாக, மற்றொரு சாதனையைப் பேச வேண்டும். கடந்த 122 வருடங்களில் இல்லாத மழை, மயிலாடுதுறையை மையம் கொண்டு கொட்டித் தீர்த்தது. அம்மாவட்டம் முழுவதும் உள்ள மின் கம்பங்கள் பலவும் முறிந்து விழுந்தன. பல இடங்களில் மின் கம்பங்கள் தலைகீழாகச் சாய்ந்து தொங்கின. இதனால் வீடுகளுக்குச் செல்லும் மின்சாரம் தடைபட்டது. இதனை சீர்செய்ய உடனடியாக அமைச்சர் செந்தில் பாலாஜி களத்துக்குச் சென்றார்.
அடுத்தநாள் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 'மயிலாடுதுறைக்குச் செல்வீர்களா?' என்றொரு கேள்வி முன்வைக்கப்பட்டது. 'இன்று இரவே கிளம்புகிறேன்' என அதிரடி காட்டினார் ஸ்டாலின். அவரது பதில், சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது.
முதலமைச்சரின் தீவிர நடவடிக்கையால் சீர்காழியில் நிலுவையிலிருந்த 81 மின்மாற்றிகளில் 44 மின்மாற்றிகள் உடனடியாக சீரமைக்கப்பட்டன. 2,640 குடியிருப்புகளுக்கு மின்னல் வேகத்தில் மின் சேவையும் வழங்கப்பட்டது.
அதேபோல, தமிழ்நாட்டில் உள்ள பழமையான சட்டமன்றத் தொகுதிகளில் ராயபுரமும் ஒன்று. இந்தப் பகுதியில்தான் பிரபலமான அரசு ஸ்டான்லி மருத்துவமனையும் ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையும் உள்ளன. இந்தப் பகுதியில் துறைமுகம் நோக்கி மிகப் பெரிய கண்டெய்னர்கள் அதிகம் செல்வதால், போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி, மின்சார சேவை வழங்குவதிலும் சில இடர்பாடுகள் இருந்தன.
அதிமுகவின் 10 வருட ஆட்சியில் இதற்கான எந்த வேலைகளும் செய்யப்படவில்லை. திமுக அரசு பொறுப்பேற்றதும் மின்துறை சார்ந்த பணிகள் வேகமெடுத்தன.
'' எங்களது பிரிவில்தான் ஓஹெச்பி மின்நிலையம் அமைந்துள்ளது. இது 1974 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 38 Ring main அலகுகளைப் புதிதாக மாற்றி அமைத்துள்ளனர். இதே காலகட்டத்தில் 93 மின் பில்லர்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் புதிய பில்லர்களை உயரமாக அமைத்துக் கட்டியதால் மழைநீர் தேங்கும் காலத்திலும் மின்தடை இல்லாமல் இருக்கும்படி செய்துள்ளனர். தவிர, 2 மின்மாற்றிகளும் புதிதாக நிறுவப்பட்டுள்ளன" என்கிறார், கல்மண்படம் பகுதியில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றும் சிவசங்கரன்.
தொடர்ந்து பேசிய அவர், "இங்கு இருந்த IDH மற்றும் EGT Feeder இயங்காமலிருந்தன. அதற்கான புதிய கேபிள்கள் அமைத்து அவையும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மசூதி புதுமனைக் குப்பம் பகுதியில் அடிக்கடி மின்தடை இருந்தது. இங்கும் மின் தடையைச் சீர்செய்து புதிய பில்லர்களை அமைத்து தங்கு தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. 250 KB டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றும் புதிதாகப் போடப்பட்டுள்ளது.
இதே பகுதியில் உள்ள இரண்டு தெருக்களில் இரண்டு டிரான்ஸ்ஃபார்மர்கள் (100 Kva) அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 1500 மீட்டர் கேபிள்கள் புதிதாக மாற்றப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் 2 டிரான்ஸ்ஃபார்மர்களை மாற்றினோம். இதேபகுதியில் குறை மின்அழுத்தப் பிரச்னை இருந்தது. அதற்காக, இரண்டு 100 Kva மின்மாற்றி போட்டுள்ளனர். இதனால் கிட்டத்தட்ட 500 பயனாளர்கள் பயனடைந்துள்ளனர்" என்கிறார் சிவசங்கரன்.

20 ஆயிரம் பயனாளர்களுக்குக் கிடைத்த பயன்
அடுத்ததாக, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள போளச்சேரியில் 10 ஆண்டுகளாக குறை மின்அழுத்தப் பிரச்னை (Low voltage) இருந்துவந்தது. இந்தப் பகுதியில் மின்விசிறிகூட போட முடியாத சூழல் இருந்துவந்தது. அது தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. இதனால், 20 ஆயிரம் பயனாளர்கள் பலன் பெற்றுள்ளனர். இந்த ஊரில் 250 மின்மாற்றிகள் உள்ளன. இப்போது தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் குடியிருப்புகளைத் தாண்டி தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. கண்ணகப்பட்டு பகுதியில் நிலவும் குறை மின்அழுத்தப் பிரச்னையைச் சரி செய்வதற்கு மட்டும் 8 கோடி ரூபாய் வரையில் செலவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 5 ஆயிரம் பயனாளர்களுக்குத் தடையில்லா மின்சாரம் கிடைத்துள்ளது. வடக்கு மாட வீதியில் 250 Kva மின்மாற்றியை ஒரே நாளில் மாற்றித் தந்துள்ளனர்.
இதுகுறித்து சுண்ணாம்புக் கால்வாய் பகுதியில் வசிக்கும் ரேவதியிடம் பேசினோம். ''இத்தனை வருஷமா மின்சாரம் இல்லாம இருந்தோம். அதனால இருட்டுல வெளியே செல்ல முடியாது. இரவுல பாம்பு, பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதுவரை மெழுகுவத்தியை ஏத்தி வச்சுட்டுத்தான் பிள்ளைகள் படிச்சுட்டு வந்தாங்க.
ஆனால் இப்போ கரண்ட் வசதி கிடைச்சதால கிராமமே மாறிடுச்சு. வீட்டுல இரவு நேரத்தில் ஆண்கள் இல்லைன்னா பயமா இருக்கும். அந்தப் பயம் இப்போ இல்லை. ஊரே வெளிச்சமாக இருக்கும்போது பயம் இருக்காது இல்லையா? இதுவரை நாங்க மிக்சி, கிரைண்டரை பயன்படுத்தியதே இல்லை. கையிலதான் மாவு ஆட்டுவோம். அந்த சங்கடம் இப்போ இல்லை. மின்சார வசதி கிடைச்சதால எல்லா வேலையும் ஈஸியா மாறிடுச்சு" என்கிறார்.
''முந்தைய அதிமுக ஆட்சியில், 'மின்மிகை மாநிலம்' என்ற பிரசாரம் முன்வைக்கப்பட்டது. மின் உற்பத்தியே செய்யாமல் வெளிநிறுவனங்களில் மின்சாரத்தை வாங்கிவிட்டு மின்மிகை எனப் பொய் பிரசாரம் செய்தனர். அந்த அவலநிலைக்கு திமுக ஆட்சியில் முடிவு கட்டப்பட்டுள்ளது" என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ எஸ்.எஸ். பாலாஜி.
செம்பாக்கம் பகுதியில் இருளர் கிராமம் உள்ளது. இந்தக் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தனியே ஒரு மின்மாற்றியையும் அமைத்திருக்கிறார்கள். புதிதாக கண்ணகப்பட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஃபீடர்(Feeder), 4.2 கி.மீட்டருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.40.16 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. வடநெம்மேலி, நெம்மேலி, சூளேரிக்காடு, கோவளம் வரையில் உள்ள 8 ஆயிரம் பயனாளர்களுக்குப் பயன் கிடைத்துள்ளது.

மின் இணைப்பு பெற்ற பழங்குடி கிராமம்
திருப்போரூரை விடவும் நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள பழங்குடி கிராமத்தின் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. அங்கு அணில்காடு என்ற பழங்குடி கிராமம் உள்ளது. இந்தக் கிராமம், முதல்முறையாக மின்சார இணைப்பைப் பெற்றுள்ளது. இந்தக் கிராமம் காலங்காலமாக மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடந்தது.
இங்கு ஜோகி கொம்பை, செங்கல் கொம்பை, அணில்காடு உள்ளிட்ட 7 கிராமங்கள் உள்ளன. அங்கு சோலார் வசதியை அமைத்துக் கொடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. அதனால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, சமபந்திக் கூட்டத்தின்போது மின் இணைப்பு வேண்டி கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் ஒருபகுதியாக முதற்கட்டமாக ரூ.1.77 லட்சம் மதிப்பீட்டில் ஏழு வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. இன்னும் இரண்டு வீடுகள் மட்டுமே பாக்கி உள்ளன. இதனால், அப்பகுதி மக்கள் உற்சாகத்தில் உள்ளனர். 'வனவிலங்குகளின் தாக்குதலிலிருந்து இனி தப்பித்துக் கொள்ள முடியும்' என்றும் அவர்கள் நம்பிக்கையோடு பேசுகின்றனர்.

25 ஆண்டுகால பிரச்னைக்குத் தீர்வு
இதே நீலகிரி மாவட்டத்தில் உள்ளது குன்னூர் தாலுகாவில் குரங்குமேடு என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை. இத்தனை ஆண்டுகளாக இருளில் மூழ்கிக் கிடந்த இப்பகுதி மக்கள், இப்போதுதான் மின்சார வெளிச்சத்தைப் பார்க்கிறார்கள்.
இங்கு புதிதாக மின் இணைப்புகள் வழங்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இக்கிராமப் பகுதியிலும் பசுமை வீடு திட்டத்தின் மூலம் 3 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
திமுக அரசு பொறுப்பேற்றதும் அக்கிராமத்துக்கு விரைந்த அதிகாரிகள் அம்மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்துள்ளனர். இதன்மூலம் கடந்த 25 ஆண்டுகளாக மின்சாரமின்றித் தவித்த இக்கிராமத்துக்கு தமிழ்நாடு அரசு மின்சாரம் வழங்கியுள்ளது.
-
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications