கோவை ரோட் ஷோவில் பள்ளி மாணவர்கள்! பிரதமர் மோடிக்கு எதிராக.. தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்
சென்னை: கோவையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி நடத்தியிருந்த ரோட் ஷோவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றிருந்தது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இது தோடர்பாக தேர்தல் ஆணையத்திடம் மோடிக்கு எதிராக திமுக புகார் அளித்திருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டை போலவே, இந்த ஆண்டும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், கோவையில் பிரதமர் மோடி நேற்று ரோட் ஷோ நடத்தியிருந்தார். கோவை விமான நிலையத்தில் இருந்து தமிழக காவல் துறை மற்றும் எஸ்பிஜி பாதுகாப்போடு கோவை சாய்பாபா கோயிலில் இருந்து 2.5 கி.மீ தொலைவுக்கு 'ரோட் ஷோ' நடத்தியிருந்தார்.

பிரதமருக்கு பாஜக தொண்டர்கள் வழிநெடுகிலும் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தவிர தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலைக்குழுவினரும் பிரதமருக்கு வரவேற்பளித்தனர். அதேபோல நீலகிரி மாவட்ட தோடர் மலைவாழ் மக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும் வரவேற்பளிக்கப்பட்டது. இந்த ரோட் ஷோவின்போது, 1998ம் கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் படத்திற்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
ஆர்எஸ்புரம் தலைமை தபால் நிலையம் முன்பு உயிரிழந்தோர் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த படங்களுக்கு அஞ்சலி செலுத்த, பிரசார வாகனத்திலிருந்து இறங்கிய பிரதமர், காலணிகளை கழற்றிவிட்டு வெறும் காலுடன் சென்று, உருவப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து ரோட் ஷோ நிறைவடைந்தது.
ஆனால், ரோட் ஷோவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றிருந்தது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. தேர்தல் பிரசாரத்தில் சிறார்கள், குழந்தைகள், மாற்று திறனாளிகள் ஈடுபடுத்தப்படக்கூடாது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கூறியிருந்தார். இந்நிலையில், பிரதமரின் ரோட் ஷோவில் பள்ளி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தது தேர்தல் விதி மீறல் என அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின.
இது தொடர்பான விசாரணையில், கோவையில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியான ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் மாணவர்கள்தான் இதில் பங்கேற்றிருந்தனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பேரணியில் மாணவர்களை பங்கேற்க வைத்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியர், பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோவை தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல, இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக திமுக புகார் அளித்திருக்கிறது. மட்டுமல்லாது, சென்னையில் தனியார் தொலைகாட்சி சேனலின் 5ம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத ரீதியில் பிரச்சாரம் செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே இது குறித்து அவருக்கு எதிராகவும் திமுக புகார் அளித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications