சின்னப்பையனை தோற்கடிக்க கலெக்டருக்கு பிரஷர்.. திமுகவுக்கு பெரிய மனசு இல்லை - வருத்தப்பட்ட பிரேமலதா
சென்னை: விருதுநகரில் லோக்சபா தொகுதியில் சின்னப்பையனை (விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்) பெரிய மனசு பண்ணி ஜெயிக்க வச்சிருந்தீங்கன்னா இந்த ஆட்சியை தலைவணங்கி வரவேற்று இருப்பேன். ஆனால் கலெக்டருக்கு பிரஷர் போட்டு சூழ்ச்சி செய்து வீழ்த்தி விட்டதாக தேமுதிமுக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆளும் திமுக தரப்பை விமர்சித்துள்ளதோடு மறு ஓட்டுப்பதிவு கோரி உள்ளார்.
நடிகர் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் உள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன், தேமுதிக கூட்டணி அமைத்தது. தேமுதிகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பபட்டன.

இதில் விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் - பிரேமலதா தம்பதியின் மகன் விஜயபிரபாகரன் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்டார். அவர் சிட்டிங் எம்பியான திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மற்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை எதிர்த்தார்.
கடந்த 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்றார். தேமுதிகவின் விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகளை பெற்றார். இதனால் 4,379 வாக்கு வித்தியாசத்தில் விஜயபிரபாகரனை காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா 1,66,271 வாக்குகள் பெற்று 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
உண்மையில் இந்த விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் எம்பிக்கு, விஜயபிரபாகர் கடுமையான போட்டியை கொடுத்தார். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின்போதும் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். இதனால் யார் வெல்வார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெறும் 4,376 ஓட்டு வித்தியாசத்தில் விஜயபிரபாகரனை வென்றார். இந்த லோக்சபா தேர்தலில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த வேட்பாளராக விஜயபிரபாகரன் இருக்கிறார்.
இந்நிலையில் தான் இன்று தேமுதிக பொதுச்செயலாளரான பிரேமலதா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தனது மகன் விஜயபிரபாகரனை அமைச்சர்கள் மூலம் சூழ்ச்சி செய்து தோற்கடித்ததாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: 50 ஆண்டு 60 ஆண்டு கட்சி நடத்துறீங்க. ஆட்சியில் இருக்கீங்க. ஒரு சின்னப்பையன் முதல் முறை தேர்தலில் நிற்கிறார். அவர் ஜெயிச்சாதான் என்ன போச்சு உங்களுக்கு.
39 தொகுதியிலும் ஜெயிச்சதா அறிவிச்சிட்டு இருக்கீங்களே, ஒரு தொகுதியில் கடைசி வரை போராடி வருகிறாரே ஒரு இளைஞர் அப்படினு பெரிய மனசோட ஜெயிக்க வைத்திருந்தால் இந்த ஆட்சியை தலைவணங்கி போற்றி வரவேற்று இருப்பேன். ஆனால் சூழ்ச்சி செய்து அவரை ஜெயிக்க விடக்கூடாது என்பதற்காக அமைச்ர்களை வைத்து அதிகாரிகளை மிரட்டி, கலெக்டர் பிரஷர் தாங்க முடியாமல் செல்போனை ஸ்விட்ச்ஆப் செய்யும் வகையில் தவறு நடந்துள்ளது.
எனவே விஜயகாந்த் ஆசியுடன் தேமுதிக சார்பில் மீண்டும் விருதுநகரில் மறு ஓட்டு எண்ணிக்கை நிச்சயமாக, உடனடியாக நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டு கொள்கிறேன். மறு ஓட்டு எண்ணிக்கைக்கு அனுமதித்தால் அதனை தலைவணங்கி ஏற்றுக்கொள்வோம்.
இந்த மறு ஓட்டு எண்ணிக்கை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி முன்பு நியாயான முறையல் ஏஆர்ஓ, ஆர்ஓ முன்பு நடத்த வேண்டும். நியாயமான முறையில் நடத்த வேண்டும். அதன் முடிவு என்னவாக இருந்தாலும் கூட நாங்கள் ஏற்றுக்கொள்வோம்'' என்றார். இதன்மூலம் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக தனது அமைச்சர்களை பயன்படுத்தி சூழ்ச்சி செய்து விஜயபிரபாகரனை மாணிக்கம் தாகூரிடம் தோற்கடித்ததாக பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications