சமூக நீதிக்கு அடித்தளம் போட்டதே திமுக தான்.. சீறிய விஜய்க்கு கோவை வைஷ்ணவி பதில்!
சென்னை: "சமூகநீதி வழங்க திமுக அரசுதான் அடித்தளம் போட்டது என்பதை நீங்கள் முதலில் அறிந்து கொள்ளுங்கள்" என தவெக தலைவர் விஜய்க்கு பதில் கொடுத்துள்ளார் சமீபத்தில் தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த கோவை வைஷ்ணவி.
சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் மத்திய பாஜக அரசையும், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசையும் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் தவெக தலைவர் விஜய். இந்நிலையில், அண்மையில் தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த கோவை வைஷ்ணவி, விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார்.

விஜய்க்கு வைஷ்ணவி பதில்
கோவை வைஷ்ணவி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "1960 களிலேயே தமிழ்நாட்டில் சாதி அடிப்படையிலான தரவுகளை பதிவு செய்து சமூகநீதி, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் நியாயமான இட ஒதுக்கீடு - இவை அனைத்துமே தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் வந்த திராவிட இயக்கத்தால் தான் நிகழ்ந்தது.
தவெக தலைவர் விஜய் அவர்களே.. சமூகநீதி வழங்க தி.மு.க அரசுதான் அடித்தளம் போட்டது என்பதை நீங்கள் முதலில் அறிந்து கொள்ளுங்கள். தி.மு.க தலைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சருமான ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களின் குரலாக ஒன்றிய அரசின் எதிர்ப்பு பேச்சுகளுக்கு நேராகவே பதிலளித்து வருகிறார்.
தி.மு.க மக்கள் உரிமைக்காகவும், தமிழ்நாட்டின் நன்மைக்காகவும் முன்னின்று போராடும் திராவிட சக்தி. சமூகநீதி என்பது எங்களுக்கான DNA." எனத் தெரிவித்துள்ளார்.
விஜய் சொன்னது
முன்னதாக விஜய் வெளியிட்டிருந்த அறிக்கையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்துச் சமூக மக்களின் சமூக நீதிக்கான உரிமை முழக்கம். இந்தக் கோரிக்கையானது, இந்திய ஒன்றியமெங்கும் வலுவடைந்த காரணத்தால் ஒன்றிய பா.ஜ.க அரசு இறங்கி வந்து, நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தது.
இந்தக் கணக்கெடுப்பு, இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 2027 மார்ச் 1ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டில் சமூக நீதிக்கான எங்களுடைய முழுமுதல் கோரிக்கையாக இந்தச் சாதிவாரிக் கணக்கெடுப்பு கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இதை ஒன்றிய அரசு பல்வேறு அரசியல் காரணங்களுக்காக வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டிருக்கிறது.
வெறும் கண்துடைப்பு வேண்டாம்
இந்தச் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும் ஒன்றிய அரசு, மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்த்து, வெறும் கண்துடைப்பு சாதிவாரித் தலைக்கட்டுக் கணக்கெடுப்பாக நடத்தக் கூடாது; அனைத்து வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு மற்றும் உள் ஒதுக்கீடு முறையாகக் கிடைக்கப் பெறும் வகையில் நடத்த வேண்டும். இதற்கென்று அனைத்துச் சமூகத்தின் பிரதிநிதிகளும் உள்ளடங்கிய ஒரு பிரத்தியேக ஆணையம் அல்லது குழு அமைக்க வேண்டும்.
உரிய தரவுகள் முறையாகவும் முழுமையாகவும் இருக்கும் வகையில் குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயம் செய்து இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் எங்கள் பிரதான கோரிக்கையான விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
குறிப்பாக, மக்களவைத் தொகுதிகளுக்கான மறுசீரமைப்பை நோக்கமாகக் கொண்டு இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது. மாறாக அனைத்துச் சமூகத்திற்கும் உரிய விகிதாசார அடிப்படையில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை முன்னிலைப்படுத்துவதாக மட்டுமே இருக்க வேண்டும். இதுவே முழு அளவிலான சமூக நீதி ஆகும். இந்தக் கணக்கெடுப்பின் வாயிலாக உண்மையான சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளை விமர்சித்த விஜய்
மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு (Caste Census) நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்தாலும், மாநில அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை (Caste Survey) நடத்த வேண்டும். அண்டை மாநில அரசுகள் சில தங்களுக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தி, தன்னிச்சையாக சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு நடத்தியுள்ளன. இந்த ஆய்வு மீண்டும் நடத்தப்படும் என்று சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
எனவே, தமிழ்நாடு அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு (Caste Survey) நடத்த வேண்டும். மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டியதில்லை என்கிற ஒன்றிய அரசின் அறிவிப்பைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுக அரசு, பா.ஜ.க.வின் முதுகிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சமூக அநீதிக்குத் துணை போகக் கூடாது.
அவ்வாறு ஒளிந்துகொண்டு மாநில அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் விட்டுவிட்டால், தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வுக்கான கோரிக்கை இன்னும் வலுவடையும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
அத்துடன் எங்கள் கொள்கைத் தலைவர் பெரியாரின் கொள்கை முழக்கமான விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை, கபட நாடகத் திமுக அரசு, பிளவுவாத பாஜக அரசுடன் இணைந்து அமல்படுத்தத் தவறினால், இந்த மக்கள் விரோத அரசுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications