பொய் சொல்ல அவங்களே கூச்சப்படல.. உண்மை பேசும் நாம ஏன் தயங்கனும் - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
சென்னை : வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்புவோரின் வாய்ஜாலச்சதியினை முறியடித்து நம் சாதனையைப் பரப்புவோம் எனவும், பொய் சொல்வதற்கே சிலர் கொஞ்சமும் கூச்சப்படாதபோது, உண்மையைப் பேசுவதற்கு நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? என திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் எழுதிய மடலில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், "சாதனையைச் சொல்வோம்; களத்தை வெல்வோம்" எனக் குறிப்பிட்டு திமுகழக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். அதில் "நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல் என தொடங்கியுள்ளார்.

நல்லாட்சி வழங்கும் திமுக
நல்லாட்சி வழங்கி வரும் தி.மு.கழக அரசின் திட்டங்கள் உள்ளாட்சிவரை படிநிலைகளின் வழியே ஊடுருவிச் சென்று, ஒவ்வொரு ஊரிலும், அதில் உள்ள ஒவ்வொரு தெருவிலும், அங்கே வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திலும், அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் பயன்பெற்று மகிழ்ந்திட வேண்டும் என்ற உன்னத நோக்கமே, நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் நமக்கான இலக்காகும். கழக வேட்பாளர்களும், தோழமைக் கட்சி வேட்பாளர்களும், ஒவ்வொரு வாக்காளரையும் தவறாமல் நேரில் சந்தித்து, வேண்டுகோள் விடுத்து, தங்கள் வெற்றியை உறுதிசெய்யும் விளக்கப் பரப்புரையை மேற்கொள்கின்ற நேரம் இது.

நிறைய பணிகள்
வேட்பாளர்களையும், அவர்களுக்காக அரும்பாடுபடுகிற உடன்பிறப்புகளையும், வெற்றியை மனமுவந்து வாரி வழங்கவிருக்கிற வாக்காளர்களையும், உங்களுடன் இணைந்து நானும் நேரில் சந்திக்கவே பெரிதும் விரும்புகிறேன். முதலமைச்சர் என்ற பொறுப்பை இதே வாக்காளர்கள்தான் கடந்த ஆண்டு மே மாதம் என்னை நம்பி, உளப்பூர்வமாக ஒப்படைத்தார்கள். அவர்கள் வைத்த நம்பிக்கை, ஒரு நாளும் ஒரு சிறிதும் வீணாகாதபடி, ஒட்டுமொத்த ஆற்றலையும் பயன்படுத்தி தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். நிறைவேற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன.

ஈரைப் பேனாக்கும் எதிர்கட்சி
எந்தவொரு ஆக்கப்பூர்வமான - பொறுப்பான விமர்சனத்தையும் முன்வைக்க முடியாத எதிர்க்கட்சியினர், ஈரைப் பேனாக்கி இட்டுக் கட்டும் வேலையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். வெறும் வாயையே மென்று சுகம் காணும் அவர்களுக்கு, வெல்லமும் அவலும் கலந்து வாயில் போட்டது போலாகிவிடும் என்பதே என் எண்ணம். விமர்சனங்களை நேரடியாக எதிர்கொள்ள எப்போதும் நான் தயங்கியதில்லை. உங்களில் ஒருவனான என் மீது, சட்டமன்றத் தேர்தல் களத்திலும், அதற்கு முன்பும், என்னென்ன விமர்சனங்களை வைத்தார்கள் என்பதை உடன்பிறப்புகளாகிய நீங்கள் நன்றாகவே அறிவீர்கள். அவர்களின் விமர்சனங்களுக்கு, நம்முடைய சீரிய செயல்பாடுகளால், செம்மையான பதிலடி தர வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். அதனால், நேரடிப் பரப்புரை நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, காணொலிப் பரப்புரைக் கூட்டங்கள் வாயிலாக, உடன்பிறப்புகள் மற்றும் வாக்காளர்களின் ஒளிமுகம் கண்டு, அகம் மிக மகிழ்கிறேன்.

மலையளவு பொய்கள்
"மலையளவு பொய்யாக இருந்தாலும், அதை உடைக்க உண்மை ஒன்றே போதும். காற்றேற்றப்பட்ட பலூன், கண்ணுக்குத் தெரியாத குண்டூசி குத்தினாலே, உருத் தெரியாமல் சிதறிவிடும் அல்லவா! நீங்கள் உண்மைகளை மக்களிடம், உரிய வகையில் எடுத்துச் சொன்னாலே போதும். எதிரணியினர் நம்மை கோபப்படுத்துவார்கள்; ஆத்திரப்படுத்துவார்கள். அதற்கு நாம் எதிர்வினையாற்ற வேண்டும் என்பதுதான் அவர்கள் எதிர்பார்ப்பது! அவர்கள் போல நாம், தரம் தாழ்ந்து, நிலை தடுமாறி, நடந்து கொள்ளவும் முடியாது. வெறும் கரண்டி பிடித்துள்ளவன், கையை எப்படி வேண்டுமானாலும் சுழற்றலாம். ஆனால், எண்ணெய் கரண்டியை கையில் வைத்துள்ள நாம் அந்த மாதிரி சுழற்ற முடியாது; மீறிச் சுழற்றினால், எண்ணெய் கீழே கொட்டிவிடும். ஆட்சியில், வெகுமக்கள் வழங்கிய அதிகாரத்தில் நாம் இருப்பதால், அவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு, கீழே இறங்கி தெருச்சண்டை போடவும் முடியாது; லாவணி பாடவும் முடியாது. இதை நீங்கள் எப்போதும் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

வாட்ஸ் ஆப் குழுக்கள்
தொலைக்காட்சி ஊடகங்கள், இணையதளங்கள், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றின் வரிசையில் அதிகப்படியான மக்களால் பார்க்கப்படுவதும், படிக்கப்படுவதும், பகிரப்படுவதும் வாட்ஸ்அப் செய்திகள்தான். புதிய புதிய வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்குங்கள். சாதாரண மக்கள் பார்வையிடும் குடும்ப வாட்ஸ்அப் குழுக்கள், பொதுவான குழுக்கள் ஆகியவற்றில் நமது செய்திகளைக் கச்சிதமாகப் பகிருங்கள். பொய் சொல்வதற்கே சிலர் கொஞ்சமும் கூச்சப்படாதபோது, உண்மையைப் பேசுவதற்கு நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? அந்தத் தயக்கத்தைத் தகர்த்தெறிந்து, உண்மையான செய்திகளை உரக்கச் சொல்லி எல்லாருக்கும் கொண்டு சேர்ப்போம்" என்பதை தகவல் தொழில்நுட்ப அணி சார்பிலான காணொலிக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்.

தொடரட்டும் நம்ம ஆட்சி
'உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி' என்ற தலைப்பில், பிப்ரவரி 6-ஆம் நாள் தொடங்கிய காணொலிக் கூட்டம் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கிய வகையில் பிப்ரவரி 17 வரை தொடர்கிறது. கழகத்தினரையும், பொதுமக்களையும், வாக்காளர்களையும், காணொலி வழியே கண்டு, களிப்புமிகக் கொண்டு, உரையாடிடும் உற்ற வாய்ப்பாகவே இதனைக் கருதுகிறேன். பொதுக்கூட்டங்களில் ஆயிரம் பேருக்கு மேல் கூடக்கூடாது என்கிற மாநில தேர்தல் ஆணையத்தின் நெறிமுறையைப் பின்பற்றி, பிப்ரவரி 6-ஆம் நாள் கோவை மாவட்டத்திற்கான காணொலிக் கூட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்றேன். அது கூட்டமல்ல, கழகத்தின் 'மெய்நிகர் மாநாடு'.

ஆட்சி – அதிகாரம்
ஆட்சி - அதிகாரம் - பதவி அனைத்தையுமே, சமூகநீதி எனும் சாலச் சிறந்த இலட்சியத்தை நிறைவேற்றுவதற்குத் தக்க கருவியாகக் கருதுகிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். தேர்தல் களத்தில் பெறுகின்ற வெற்றியும்கூட, நம் இலட்சியப் பாதைக்கான வெளிச்ச விளக்குகள்தான். கொள்கை வழிப் பயணத்தில் எத்தனை சவால்கள், சங்கடங்கள் குறுக்கிட்டாலும், காட்டாறுகளும் நெருப்பாறுகளும் மோதினாலும், அவற்றை அஞ்சாமல் எதிர்கொண்டு, அயராது பயணத்தைத் தொடர்ந்து வருகிறோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் கவனம் செலுத்துவதும்கூட, கொள்கைகளை நிறைவேற்றப் பயன்படும் பயணத்தின் ஒரு கட்டம்தான்.

மகத்தான வெற்றி
தமிழ்நாட்டின் அனைத்து மக்களுக்குமான உரிமைகளை உறுதியாக நிலைநாட்டும் நமது இலட்சியப் பயணத்தின் வெற்றி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் முழுமையாக அமைந்திட, உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் களப் பணியாற்றுங்கள். கழகத்தினருடனும் தோழமைக் கட்சியினருடனும் ஒருங்கிணைந்து உற்சாகமாகப் பணியாற்றுங்கள். மக்களிடம் செல்லுங்கள்; மகத்தான வெற்றியை அவர்கள் மனமுவந்து தருவார்கள்" இவ்வாறு அந்த மடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications