திமுக 177 இடங்களில் வெல்லும்.. அதிமுக 49 இடங்களில் மட்டுமே வெல்லும்.. டைம்ஸ் நவ்-சி வோட்டர் கணிப்பு
சென்னை: திமுக காங்கிரஸ் கூட்டணி 177 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று டைம்ஸ் நவ்-சி வோட்டர் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம்
அதிமுக-பாஜக கூட்டணி 49 இடங்களில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் அந்த கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக-பாஜக-பாமக மற்றும் சில கட்சிகள் இணைந்து ஒரு அணியாகவும், திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்து ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன.
இதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஒரு அணியும், டிடிவி தினகரனின் அமமுக, விஜயகாந்தின் தேமுதிக, எஸ்டிபிஐ மற்றும் சில கட்சிகள் இணைந்து ஒரு அணியாகவும் தேர்தலை சந்திக்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி தனியாக தேர்தலை சந்திக்கிறது.

புதிய தலைமுறை சர்வே
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்புகளை நடத்தி பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அண்மையில் புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டிருந்தத. அதில் திமுக கூட்டணியே அதிக இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டது.

டைம்ஸ் நவ் சர்வே
இந்நிலையில் இன்று பிரபல ஆங்கில ஊடகமான டைம்ஸ் நவ், சி வோட்டருடன் இணைந்து கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. அந்த கணிப்பில், திமுக காங்கிரஸ் கூட்டணி 177 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த முறையைவிட இந்த முறை 79 இடங்கள் கூடுதலாக வெல்லும் என கூறப்பட்டுள்ளது.

49 இடங்கள்
அதேநேரம் அதிமுக, பாஜக, பாமக, தமாகா ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி இந்த முறை 49 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று டைம்ஸ் நவ், சி வோட்டர் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது கடந்த முறை அதிமுக வென்ற இடங்களை விட இந்த முறை 87 இடங்கள் குறைவாகவே வெல்லும் என கூறப்பட்டுள்ளது.

மநீம
முதல்முறையாக சட்டசபை தேர்தலில் களம் காணும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 3 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் டிடிவி தினகரனின் அமமுக 3 இடங்களிலும், மற்றவர்கள் 2 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் டைம்ஸ் நவ்-சி வோட்டர் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.