"ரூ.30 லட்சம் வரை கடனுதவி".. சிறுபான்மையினரை கவர திமுக தேர்தல் அறிக்கையில் டாப் 10 அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி திமுகவின் தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதில் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர்களை கவரும் வகையில் தொழில் தொடங்க ரூ.30 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் என்பது உள்பட 10 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில் சிறுபான்மையின மக்களுக்காக பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் வாழும் மதவழி மற்றும் மொழிவழி சிறுபான்மையினரின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தை 1989-ஆம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதி அமைத்தார்கள். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி 2010-ஆம் ஆண்டு நிறைவேற்றினார்கள். ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக சென்னை நங்கநல்லூரில், ரூ.65 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்பட்டு வருகிறது.
ஹஜ்புனித பயண மானியம்
தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு ஆண்டு நிர்வாக மானியமாக ரூ.80 இலட்சம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஹஜ் பயனாளி ஒருவருக்கு ரூ.25,000 வீதம் ஹஜ் மானியம் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 11,364 ஹஜ் பயனாளிகள் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்காக அரசு ரூ.24.56 கோடி மானியமாக வழங்கியுள்ளது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 31,625 பயனாளிகளுக்கு ரூ.207 கோடி மதிப்பில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நலத் திட்டங்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூபாய் 405 கோடி அளவில் அரசு நிதி தரப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில் 10 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.
25,000 இளைஞர்களுக்கு பயிற்சி
1. சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் மாவட்டங்களில், திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
2. சிறுபான்மை சமூகத்தினர் வணிகம் மற்றும் தொழில் தொடங்க கடன் பெறும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்.
3. சிறுபான்மை இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோருக்கு சிறப்புத் திறன் பயிற்சி வகுப்புகள் துவக்கப்படும். ஆண்டுக்கு 25,000 இளைஞர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படும்.
4. இஸ்லாமிய மக்களின் அடக்கத் தலங்களுக்கு இயன்ற இடங்களில் இடம் ஒதுக்கப்படும்.
5. சிறுபான்மை பள்ளிகளில் காலியாக உள்ள அரபி ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
தொழில் தொடங்க ரூ.30 லட்சம் வரை கடன்
6. இஸ்லாமியப் பெண்களின் கல்வியை ஊக்குவிக்க வக்ஃபு வாரியத்தின் வாயிலாக கூடுதல் கல்லூரிகள் திறக்கப்படும்.
7. சிறுபான்மையினர் அயலக பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்ய ஒரு சிறப்புத் திட்டம் உருவாக்கப்படும். அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு சிறுபான்மையினருக்கும் ஒரு புதிய திட்டம் உருவாக்கப்படும்.
8. சிறுபான்மையினர் தொழில் தொடங்க TAMCO மூலம் கடன்பெறும் உச்சவரம்பின் அளவு ரூ. 30 இலட்சமாக உயர்த்தப்படும்.
9. பள்ளிவாசல் மற்றும் தேவாலயங்களில் விரிவாக்கம், பராமரித்தல் அல்லது புதுப்பித்துக் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற 07.03.2024 அன்று வெளியிடப்பட்ட நிலையான இயக்க முறை (SOP), முறையாகவும், விரைவாகவும் செயல்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.
10. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள உருது ஆசிரியர் பணியிடங்கள் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விரைந்து நிரப்பப்படும்.












Click it and Unblock the Notifications